திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

திறந்த புத்தகம்

By அழகியசிங்கர்| DIN | Published: 03rd September 2018 01:30 AM

திறந்த புத்தகம் - அழகியசிங்கர்; பக்.211; ரூ.170; விருட்சம், 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-33
அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். 
கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். "அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர்' என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் பற்றிய பதிவு "ஆத்மாநாம் சில குறிப்புகள்'. அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்மாநாம் நினைவாக நடந்த உணர்ச்சிபூர்வமான இரங்கல் கூட்ட விவரணையுடன் அந்தப் பதிவை நிறைவு செய்கிறார்.
பேராசிரியரும் நாவலாசிரியரும் கவிஞருமான நகுலனைப் பற்றிய பதிவில் அவருடைய ஐந்து கவிதைகள் இடம்பெறுகின்றன. 
தமிழில் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவது பற்றியும், அதை விற்பதற்குப் படும் பாட்டைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
"யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?' என்ற பதிவு நியாயமான கவலையை எழுப்பக் கூடியது. "இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு. சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை' என்கிற அவரது அங்கலாய்ப்பு நிஜமாகிவிடக் கூடாதே என்ற கவலை நமக்கும் ஏற்படுகிறது. 
 

More from the section

இலக்கியச் சங்கமம்
கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?
அருந்தவச் செல்வர் அரிராம் சேட்
கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்
இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்