திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

புதுவெள்ளம் - அகிலன்

DIN | Published: 10th September 2018 01:00 AM

புதுவெள்ளம் - அகிலன்; பக்.656; ரூ.500; தாகம், சென்னை-17; )044 - 2834 0495.
 வாழ்க்கையிலிருந்துதான் கதை பிறக்கிறது. 1960 - களில் வார இதழில் தொடராக வந்து 11 ஆம் பதிப்பு கண்டுள்ள இந்த நாவலும் அந்த ரகம்தான். விடுதலைக்குப் பின் நாட்டில் மாறிவரும் சமூகத்தின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
 குடியானவ குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் விட்டுவிட்டு, ரிக்ஷா இழுப்பவனாகவும், வியாபாரியாகவும் மாறி கடைசியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாகிறான் கதையின் நாயகன் முருகையன். அவன் வாழ்வில் சித்திரா, சாந்தா என்ற இரு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். இரு துருவங்களான அவர்களில் யார் முருகையனின் கரம் பற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
 இந்நாவலில் வரும் பல பாத்திரங்கள் வழியே சமூக நடப்புகள் பிரதிபலிக்கப்படுகின்றன.
 சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கை நாவலின் பிற்பகுதியில் வருகிறது. இதை எழுத நூலாசிரியர் சிங்கரேணி நிலக்கரி சுரங்கங்களை நேரில் பார்வையிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 கிராம உழவர்களின் வாழ்க்கை சீரழியும்போது நகரச் செல்வர்கள் ஆடம்பர வாழ்வில் உயர்வது, லாப வேட்டைக்காக எல்லா உணவுப் பொருள்களிலும் கலப்படம் செய்து மக்கள் வாழ்வைக் கெடுப்பது, காதலும் ஒரு கவர்ச்சிக் கருவியாகப் பயன்பட்டு பணம் திரட்ட உதவுவது என இன்றைய புதுவெள்ளத்தில் பொங்கும் பேராசைப் பெருக்கை புதினத்தில் கவலையுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
 வசீகரத்திலும், வர்ண ஜாலத்திலும் ஏமாறாமல், உடல் உழைப்பும், உண்மை அன்பும், காதலுமே வாழ்வில் ஏற்றம் தரும் என்பதை கதாநாயகன் முருகையன் வழியே உணர்த்தியுள்ளது சிறப்பு.

More from the section

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்
இலக்கியச் சங்கமம்
பாகிஸ்தான், (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)
நேரா யோசி!
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?