புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

107. கோழை மிடறாக கவி- பாடல் 6

By என். வெங்கடேஸ்வரன்| Published: 08th September 2018 12:00 AM


பாடல் 6:

    நஞ்சமுது செய்த மணிகண்டன் நமை ஆளுடைய ஞான முதல்வன்
    செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடமாம்
    அஞ்சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண்ணரிய வண்ணம் உளவாய்
    மைஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே

விளக்கம்:

புனல்=மிகுந்த வேகத்துடன் பாயும் நீர்ப்பெருக்கு கரந்த=ஒளித்த; அஞ்சுடர்=அழகிய தீபங்கள்; தீபங்கள் ஏற்றிய பின்னரே வழிபாடு செய்யவேண்டும் என்பது முறை. மேலும் பூஜை முடிந்த பின்னர் பெருமானுக்கு செய்யப்படும் பதினாறு உபசாரங்களில் தீபம் காட்டுதலும் ஒன்றாகும். மைந்தர் என்ற சொல் மைஞ்சர் என்று திரிந்தது; வல்லமை உள்ள ஆண்கள் என்று பொருள்.

ஆறு பதம்=பொருள் உடைய ஆறு ஓரெழுத்துச் சொற்கள்; ஓம் எனப்படும் பிரணவ மந்திரம் மற்றும் பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்கள். பதம் என்றால் பொருளுள்ள சொற்கள் என்று பொருள். நமச்சிவாய மந்திரத்தில் அமைந்துள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபெருமானையும், வ என்ற எழுத்து அவனது அருட் சக்தியாகிய அன்னை பார்வதி தேவியையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதானத்தையும் (மறைப்பு ஆற்றலையும்) ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கின்றன. அஞ்சு பதம் என்ற சொற்றொடர், நமக்கு சுந்தரரின் ஆரூர் பதிகத்தின் (7.83) முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிந்தை பராமரியா என்ற தொடரை, அஞ்சு பதம் சொல்லி என்ற தொடருடன் இணைத்து நாம் பொருள் கொள்ளவேண்டும். பராமரிதல் என்றால் ஆராய்தல் என்று பொருள். நாம் மனம் ஒன்றி பெருமானின் திருநாமத்தை, பஞ்சாக்கர மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக, சுந்தரர் இந்த பாடலில், நமது மனதினில் முறையாக பஞ்சாக்கர மந்திரத்தை சிந்தித்தவாறு சொல்ல வேண்டும் என்று சொல்கின்றார். அந்தி=இரவு; இரவும் பகலும், அதாவது எப்போதும் பொருளுடைய ஐந்து எழுத்துகள் கொண்ட நமச்சிவாய மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். 

    அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி
    முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்
    சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
    எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே  

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பதிகத்தின் (4.107) இரண்டாவது பாடலில், அப்பர் பிரான் சொற்களாலான ஐந்தெழுத்து மந்திரம் என்று குறிப்பிடுகின்றார். கதம்=கோபம்: 

    பதத்து எழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப் பரிவினொடும்  
    இதத்தெழு மாணி தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
    கதத்தெழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
    உதைத்தெழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே  

நமச்சிவாய மந்திரத்தை தூல பஞ்சாக்கரம் என்று கூறுவார்கள். இந்த எழுத்துக்கள் உணர்த்தும் பொருளினை நாம் முன்னே கண்டோம். உயிர்க்கு தனியாக எந்த குணமும் இல்லாததால், உயிர் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும். ய என்ற எழுத்தால் குறிக்கப்படும் உயிர், ஒரு பக்கத்தில் மலங்களாலும் மறு பக்கத்தில் சிவத்தாலும் சூழப்பட்டுள்ளது. சிவத்தைச் சென்று அடைய வேண்டும் என்று உயிர் விரும்பினாலும், அவ்வாறு நிகழாதவாறு மலங்கள் உயிரைத் தடுக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பினை விளைவிக்கக் கூடிய பாசம் ஒரு புறம் இழுக்க, முக்தி அளிக்கக்கூடிய சிவத்தைச் சார வேண்டும் என்று உயிர் விரும்ப, உயிருக்கும் பாசங்களுக்கும் இடையே ஒரு போராட்டம் நடைபெறுகின்றது. பாசத்தை வெல்லவேண்டும் என்று விரும்பும் உயிர்கள் ஐந்தெழுத்தை ஓதி, இறைவனின் துணையுடன் பாசத்தை வெல்லலாம். இதனை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (5.59.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் உயிர்களின் மனதில் சிவனும் அவனது அருட்சக்தியும் உறைந்திருப்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
    ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு
    பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
    மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே

ஆறு பதங்கள் என்பதற்கு அங்க மந்திரங்கள் என்று பொருள் கூறுவார்கள். ஜபம் செய்வதற்கு முன்னரும் ஜபம் செய்த பின்னரும், ஆறு அங்கங்களையும் தொட்டு மந்திரங்கள் செய்வது வழக்கம். பதினாறு வகையான உபசாரங்கள் செய்வது போன்று, பூஜை தொடங்கும் முன்னர் ஆறு அங்கங்களையும் தொட்டு மந்திரங்கள் சொல்வதும் வழக்கம். எனவே ஆறு பதங்கள் என்று ஆறு அங்க மந்திரங்களை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஏழினிசை என்று இசையுடன் இணைத்து பாடப்படும் பாடல்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.     
 
பொழிப்புரை:

நஞ்சினை அமுதமாக உட்கொண்டு தேவர்களை ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய பின்னர், நஞ்சு வயிற்றின் உள்ளே செல்லாமல் அதனை தேக்கியதால் மாணிக்கம் பதித்தது போன்று கழுத்தினை உடையவனாக திகழும் பெருமான், நமை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமான், ஞானத்தின் வடிமாக அமைந்துள்ள முழுமுதற் கடவுள், தனது செஞ்சடையினில் மிகுந்த வேகத்துடன் பாய்ந்து வந்த கங்கை நதியினை அடைத்து மறைத்து வைத்த பெருமான், சிவலோகத்தினை உடையவன், மிகுந்த விருப்பமுடன் அமர்கின்ற இடம் திருவைகா ஆகும். அழகிய தீபங்கள் ஏற்றி, ஆறு பதங்களாகிய ஓரெழுத்து மந்திரங்களை சொல்லி ஏழு சுவரங்களும் கலந்த இசைப் பாடல்களை பாடி, நாம் எண்ணுவதற்கு அரிய சிறப்பான முறையில் வழிபாடு செய்யும் வலிமை வாய்ந்த ஆடவர்களுடன் மகளிர் பலரும் கலந்து வழிபாடு செய்து இறைவனைத் தொழும் தலமாக திகழ்வது திருவைகா ஆகும்.           

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5
121. அரனை உள்குவீர் - பாடல் 4
121. அரனை உள்குவீர் - பாடல் 3
121. அரனை உள்குவீர் - பாடல் 2