செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

107. கோழை மிடறாக கவி- பாடல் 8

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 10th September 2018 12:00 AM

 

பாடல் 8:

    கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்
    ஐயிரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன் தன் இடமாம்
    கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்
    வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே

விளக்கம்:

வையகம்=நிலவுலகம், இங்கே நிலவுலகத்து மக்களைக் குறிக்கின்றது'; மெய்=உடல்; நல காலை=நல்ல காலைப் பொழுது, பெருமானைத் தொழுவதற்கு உகந்த நேரம் விடியற்காலைப் பொழுது என்று கூறுவார்கள். விலங்கல்=மலை; கடியோன்=கொடிய குணங்கள் கொண்ட அரக்கன் இராவணன்; நல்ல காலைப் பொழுது பெருமானைத் தொழுவதற்கு உகந்த நேரம் என்று அப்பர் பிரான் குறிப்படும் கடவூர் வீரட்டத்தின் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. பெரும்புலர் காலை என்பது, இரவின் நான்காவது (இறுதி) பகுதி, சூரிய உதயத்திற்கு ஒரு ஒன்றரை மணி நேரம் முன்னர் உள்ள நேரம் 

    பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
    அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
    கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே 

பொழிப்புரை:

இருபது கைகளும் வலிமை மிகுந்த உடலும் வருந்தும் வண்ணம் முழு முயற்சியுடன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த கொடிய குணங்களைக் கொண்ட அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் ஒருங்கே மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை அழுத்திய அழகன் சிவபெருமான் தனது இடமாக கருதுவது திருவைகா தலம் ஆகும். தங்களது கையில் நல்ல மலர்கள் கொண்டு தினமும் நல்ல காலைப் பொழுதிலும் மற்றும் மாலை நேரங்களிலும் இறைவனை மனதினில் நினைத்து பல விதமாக அவனது புகழினை பாடிக் கொண்டு உலகிலுள்ள பலரும் சென்று அடைந்து தொழுதும் புகழ்ந்தும் இறைவனை வணங்கும் அழகினை உடைய தலம் திருவைகா ஆகும்.

More from the section

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 11
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 10
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 9
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 8
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 7