வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

107. கோழை மிடறாக கவி- பாடல் 9

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 11th September 2018 12:00 AM

 

பாடல் 9:

    அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும் இவர்கள்
    எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய் ஈசன் இடமாம்
    சிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
    வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
  

விளக்கம்:

பெருமான்=பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் இந்த தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம். அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார்.         

பொழிப்புரை:

உலகத்தின் தோற்றத்திற்கும் உலகம் ஒடுங்குவதற்கும் மூல காரணனாக இருக்கும் பெருமானை தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனை, திருமாலும் பிரமனும் தங்களது செருக்கினை ஒழித்து இறைவன் என்று தொழுது நின்ற போது அவர்களுக்கு அருள் செய்த சிவபெருமான் உறைகின்ற இடம் திருவைகா ஆகும். பெருமானையே எப்போதும் சிந்தித்து அவனது புகழினைப் பாடும் அடியார்கள், தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசியவர்களாய் நறுமணம் மிகுந்த மலர்கள் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு இறைவனை வணங்கும் தலம் நன்மைகள் பல அருளும் திருவைகா ஆகும்.       

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 7
121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5
121. அரனை உள்குவீர் - பாடல் 4
121. அரனை உள்குவீர் - பாடல் 3