புதன்கிழமை 16 ஜனவரி 2019

107. கோழை மிடறாக கவி- பாடல் 10

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 12th September 2018 12:00 AM

 

பாடல் 10:

    ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே
    பேசுதல் செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம்
    தேசமது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன்
    வாசமலரான பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே

விளக்கம்:

பேசுதல் செயா=புகழினைப் பேசாத; ஈசன்=தலைவன்; பெருமான்=பெருமையை உடையவன்; சிவபெருமானை இகழ்ச்சியாக பேசி பலரையும் தங்களது மதத்திற்கு மாற்றுவது பண்டைய நாளில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் பழக்கமாக இருந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். அவ்வாறு பெருமானை இகழ்வதை நிறுத்தி, புகழினைப் பேசாமல் இருந்த சமணர் புத்தர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். 

பொழிப்புரை:

அனைவர்க்கும் தலைவன் என்றும் எம்மை ஆட்கொண்ட தந்தை என்றும் பெருமைகள் பல படைத்தவன் என்றும் முழுமுதற் கடவுள் என்றும் தன்னைப் புகழ்ந்து பேசாத சமணர்கள் மற்றும் புத்தர்களின் சித்தம் சென்று அணையாத பெருமானின் இடம் திருவைகா தலமாகும். பல தேசங்களிலும் உள்ள அடியார்கள் சென்றடைந்து பெருமானைப் போற்றி வணங்கும் புகழினை உடைய பெருமானை, நறுமணம் மிகுந்த பல வகையான மலர்கள் தூவி வணங்க அடியார்கள் சென்றடையும் தலம் திருவைகா ஆகும்.

More from the section

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 5
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 4
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 3
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 2
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 1