புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

107. கோழை மிடறாக கவி- பாடல் 11

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 13th September 2018 12:00 AM


பாடல் 11:

    முற்று நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திருவைகாவில் அதனை
    செற்ற மலினார் சிரபுரத் தலைவன் ஞானசம்பந்தன் உரை செய்
    உற்ற தமிழ் ஈரைந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்
    பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் பெரும் புகழோடே

 
விளக்கம்:

செற்றமலின்=மிகுந்த வளம்; உரை செய் உற்ற=உரை செய்த; அமரலோகம்=சிவலோகம்

பொழிப்புரை:

முழுவதும் நம்மை ஆட்கொண்டவனும் மூன்று கண்களை உடையவனும் முதல்வனாகவும் திருவைகா தலத்தில் திகழ்பவனும் ஆகிய பெருமானை, வளம் மிகுந்த சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த பத்து செந்தமிழ் பாடல்களில் வல்லமை பெற்ற அடியார்கள் உருத்திரர் என்று அழைக்கப்படும் பேற்றினை பெற்று சிவலோகத்தில் என்றும் பெருமானை விட்டு பிரியாது பெரும் புகழினோடு வாழ்வார்கள்.     

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், தேவாரப் பதிகங்களை ஒலி சிறந்து ஒலிக்கவும் சொற்கள் உச்சரிப்பு பிழையின்றியும், பாடலின் பொருளினை புரிந்து கொண்டும் உரிய இசையுடன் பொருந்தியும் பாடும் ஆற்றல் இல்லாதவரும், தங்களால் இயன்ற இசையுடன் பாடும் அடியார்களுக்கு இறைவன் அருள் புரிவான் என்று உணர்த்தி, அனைவரையும் தேவாரப் பாடல்களை பாடும் வண்ணம் ஊக்கிவிக்கும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில் தேவாரப் பாடல்களை பாடுவதில் வல்லவராக திகழும் அடியார்கள் உருத்திர பதவி பெற்று பெருமானுடன் என்றும் இணைந்து வாழும் பேற்றினையும் புகழினையும் பெறுவார்கள் என்று குறிப்பிட்டு, பதிகங்கள் பாடுவதில் வல்லவராக நாம் திகழும் வண்ணம் நம்மை ஊக்குவிப்பதையும் உணரலாம். இந்த இரண்டு பாடல்களும் அடிப்படையில் ஒரே கருத்தினை உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவார பாடல்களை பாட வேண்டும் என்பதும் அந்த பாடல்களை இசைத்து பாட வேண்டும் என்பதே இரண்டு பாடல்களும் உணர்த்தும் கருத்து. இசைப் பாடல்களை மிகவும் விரும்பும் பெருமானை, நாம் தேவாரப் பாடல்கள் பாடி மகிழ்வித்து அவனது அருள் பெறுவோமாக. மேலும் நாம் தேவாரப் பதிகங்களை பிழையின்றியும், பொருளை உணர்ந்து கொண்டு, அடுத்தவர் நாம் பாடும் போது பொருளினை புரிந்து கொள்ளும் வண்ணம் நிறுத்தியும், பதிகத்திற்கு உரிய பண்ணுடன் இணைத்தும் பாடும் வல்லவர்களாக திகழ்ந்து, உருத்திர பதவி பெற்று மகிழ்வோமாக.            

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5
121. அரனை உள்குவீர் - பாடல் 4
121. அரனை உள்குவீர் - பாடல் 3
121. அரனை உள்குவீர் - பாடல் 2