வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

121. அரனை உள்குவீர் - பாடல் 1

By என். வெங்கடேஸ்வரன்| Published: 15th February 2019 12:00 AM


பின்னணி:

சீர்காழி நகரில் அப்பர் பிரான் திருஞானசம்பந்தரை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக சீர்காழி நகரத்து திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானைத் தொழுதனர்; அதன் பின்னர் இருவருமாக அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்றனர். இருவருமாக சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் காவிரிக் கரையினில் இருக்கும் பல தலங்கள் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக சீர்காழி நகரிலிருந்து புறப்பட்டார். தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு அப்பர் பிரான் சென்ற பின்னர் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் பல பதிகங்களை சீர்காழி தலத்து இறைவன் மீது பாடினார். அத்தகைய பதிகங்களில் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்மாதிரியாக விளங்கின. இந்த தகவலை சேக்கிழார் அளிக்கும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். விகற்பம்=மாறுபட்ட

    செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
    வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்  
    சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

    நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
    சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
    மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற
    ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர் 

மேலே குறிப்பிட்ட பெரியபுராணப் புராணப் பாடலில் சேக்கிழார் உணர்த்தும் பதிகங்களில் மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி மற்றும் ஏகபாதம் ஆகிய வகையினில் அமைந்த பதிகங்களை நாம் சிந்திந்தோம். தற்போது தமிழ் இருக்குக் குறள் என்று அழைக்கப்படும் சீர்காழி பதிகத்தினை காண்போம். மற்ற சித்திரக் கவிகளைப் போன்று இந்த பதிகமும் பன்னிரண்டு பதிகங்களைக் கொண்டதாகவும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களும் பதிகத்தில் வரும் வண்ணமும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பதிகம் குறிஞ்சி பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது. குறிஞ்சிப் பண்ணில் அமைக்கப்பட்டுள்ள ஏழு பதிகங்கள் (1.90 முதல் 1.96 வரை) இருக்குக் குறள் என்றே அழைக்கப்படுகின்றன. மேலும் கொல்லிப் பண்ணில் அமைக்கப்பட்ட இரண்டு பதிகங்களும் (3.41 & 3.42) இருக்குக் குறள் என்றே அழைக்கப் படுகின்றன. 

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற  பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் தன்னை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். சம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். முதுகுன்றத்து பதிகத்தை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பல பதிப்புகளில் இரண்டு அடிகள் கொண்ட பாடலாக இந்த பதிகங்கள் அச்சிடப் பட்டுள்ளன. சில பதிப்புகளில் இரண்டு அடிகளாக இருந்தாலும், இடையில் கமா எனப்படும் நிறுத்தக் குறியுடன் அச்சிட்டு நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்று உணர்த்துவதையும் நாம் காணலாம்.   

பாடல் 1:

    அரனை உள்குவீர் 
    பிரமனூருள் எம்
    பரனையே மனம்
    பரவி உய்ம்மினே

விளக்கம்:

உள்குதல்=நினைத்தல்; இந்த பாடலில் பெருமானை நினைப்பீர்களாக என்று உலகத்தவரை நோக்கி சம்பந்தர் கூறுகின்றார். பெருமானை மனதினால் நினைப்பது, பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாட்டின் முதற்படி என்பதால், இந்த பதிகத்தின் முதற்பாடலில், மிகவும் பொருத்தமாக பெருமானை நினைத்தல் சொல்லப்படுகின்றது. உய்தல்=பிழைத்தல், உயிர் வாழ்தல்; இங்கே நல்ல கதியைப் பெறுதல் என்ற பொருளில் வருகின்றது. நல்ல நெறி என்பது யாது என்பதை அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.11.9) நமது நினைவுக்கு வருகின்றது. முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும் என்பதே இந்த பாடலின் கருத்தாகும். 

    முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
    அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
    நன்னெறியாவது நமச்சிவாயவே

உள்குவீர் என்ற சொல்லுக்கு பரமனை நினைக்கும் அடியார்கள் என்று பொருள் கொண்டு, அவர்களை அழைத்து சொல்லப்படும் அறிவுரையாக இந்த பாடல் சிலரால் கருதப் படுகின்றது. பரன்=மேலானவன்; பரவுதல்=துதித்தல், புகழினைச் சொல்லுதல்;   

பொழிப்புரை:

உலகத்தவரே, அரன் என்று அழைக்கப்படும் சிவபெருமானை உங்களது மனதினால் நினைமின்கள்; பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் வீற்றிருப்பவரும் உலகில் உள்ள அனைத்து உயிர்களினும் உயர்ந்த தன்மை உடையவனும் ஆகிய பெருமானை, உங்களது மனதினால் துதித்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. 

 

More from the section

124. வரமதே கொளா - பாடல்  5
124. வரமதே கொளா - பாடல் 4
124. வரமதே கொளா - பாடல் 3
124. வரமதே கொளா - பாடல் 2
124. வரமதே கொளா - பாடல் 1