புதன்கிழமை 20 மார்ச் 2019

121. அரனை உள்குவீர் - பாடல் 5

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 19th February 2019 12:00 AM


பாடல் 5:

    வாணிலாச் சடைத்
    தோணி வண்புரத்து
    ஆணி நற்பொனைக்
    காணுமின்களே

விளக்கம்:

ஆணி=பொன்னின் மாற்றினைக் கண்டறிய கொல்லர்கள் வைத்திருக்கும் சிறிய பொன் கட்டி; மாற்றுப் பொன் கட்டி, மற்ற பொன்னின் தரத்தை அறிந்து கொள்வதற்கு உதவுவது போன்று, இறைவன் பல்வேறு உயிர்களின் பக்குவ நிலையினை எளிதில் உணர்த்து கொள்ளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து அதற்கேற்ப அருள் புரியும் பெருமானின் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மாற்றுப் பொன் கட்டி மற்ற பொன்னை விடவும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பது போன்று ஏனையோரை விடவும் உயர்ந்தவனாக இருப்பவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வாள்+நிலா=வாணிலா; வாள்=ஒளி வீசும்; தோணி வண்புரத்து என்ற தொடரினை வண் தோணிபுரத்து என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். வண்= வளமை

பொழிப்புரை:

ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியுள்ள பெருமான், வளமை வாய்ந்த தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைகின்றான். ஆணிப் பொன் போன்று அனைவரிலும் உயர்ந்தவனாக இருக்கும் பெருமானைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. அவன், உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து உணர்ந்து அதற்கேற்ப அருள் வழங்கும் திறமை உடையவன் ஆவான்.    

 

More from the section

123. ஓர் உருவாயினை - பாடல் 39--47
123. ஓர் உருவாயினை - பாடல் 32--38
123. ஓர் உருவாயினை - பாடல் 25--31
123. ஓர் உருவாயினை - பாடல் 19--24
123. ஓர் உருவாயினை - பாடல் 14--19