சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 7

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 18th January 2019 12:00 AM


பாடல் 7:

    நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
    நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

விளக்கம்:

    நீயா மாநீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே 
    நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ

நீயா=உம்மை விட்டு நீங்குதல் அறியாத; மானி என்ற சொல் இங்கே மாநீ என்று மருவியுள்ளது மான என்றால் பெருமை என்று பொருள்; மானி என்பதற்கு பெருமை உடையவள் என்றும் மானத்துடன் வாழ்பவள் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். மதுரை அரசி மங்கையர்க்கரசி அம்மையாரை, சம்பந்தர் மானி என்று ஒரு பதிகத்தில் குறிப்பிடுகின்றார். சுந்தரரும் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில், அரசியாரை மானி என்றே குறிப்பிடுகின்றார். ஏயா=ஒப்பற்ற; மாதா=தாய்; ஏழீ=ஏழிசை வடிவாக உள்ளவன்; கா=காப்பாய்; நீ தானே=நீயே வலிய வந்து; நே=அன்பார்ந்த இடம்; தாநீ= இடத்தை உடையவனே; ஸ்தானம் என்ற வடமொழிச்சொல் தானம் என்று மாற்றப் படுகின்றது. தானத்தை உடையவன் தானி. இந்த பாடலில் அனைத்தும் நெடில் எழுத்துகளாக வருவதால் தானி என்ற சொல் தாநீ என்று மாற்றப் பட்டுள்ளது. காழீ= சீர்காழி, வேதா=மறையின் வடிவமாக உள்ளவனே, மாயாயே=மாய்த்து அருள் புரிய மாட்டாயா, மாய்=எம்மை கொல்லும்; ஆநீ=துன்பங்கள்; சென்ற பாடலில் பெருமான் நால்வர்க்கு ஐயம் தெளிவித்ததை குறிப்பிட்ட ஞானசம்பந்தர் இந்த பாடலில், வேதங்களின் உட்பொருளாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். தானி என்பதற்கு தானம் அளிப்பதை குணமாகக் கொண்டவன் என்று பொருள் கொண்டு எங்களது துன்பங்களை தவிர்த்து அருள மாட்டாயா என்று கேட்பதாக பொருள் கொள்வதும் நயமே.

பெருமானே நீ தான் வலிய வந்து எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று சம்பந்தர் கூறுவது, திருவோத்தூர் பதிகத்தில் கூறுவதை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பிழையின்றி பாடல்கள் பாடி பெருமானை வணங்கும் அடியார்களுக்கு, அடியார்கள்  அழையாமலே பெருமான் வந்து அருள் புரிய வேண்டும் என்று சம்பந்தர் கூறும் பாடல் (1.54.5) இது. உழை=பக்கம், ஒரு பக்கத்தில்

    குழையார் காதீர் கொடு மழு வாட்படை          
    உழை ஆள்வீர் திருவோத்தூர்
    பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
    அழையாமே அருள் நல்குமே
  

பொழிப்புரை:

உம்மை விட்டு நீங்குதல் என்பதை அறியாது என்றும் உம்முடன் இணைந்து இருப்பவளும்,  பெருமை உடையவளும் ஆகிய உமை அன்னையை மனைவியாக கொண்டவனே, அனைத்து உயிர்களுக்கும் ஒப்பற்ற தாயாக இருந்து அருள் புரிபவனே, ஏழிசையின் வடிவமாக உள்ளவனே, நீ தான் வலிய வந்து என்னை காத்தருள வேண்டும்; உன் பால் அன்பு கொண்டுள்ள அடியார்களின் உள்ளத்தில் குடி கொண்டவனே, சீர்காழி தலத்தில் எழுந்தருளிய பெருமானே, மறையின் வடிவமாக இருப்பவனே, எம்மை வருத்தி கொல்லும் துன்பங்களை மாய்த்து அருள் புரிய மாட்டாயா, நீ தான் அருள் புரிய வேண்டும்.      

 

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 9
121. அரனை உள்குவீர் - பாடல் 8
121. அரனை உள்குவீர் - பாடல் 7
121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5