செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 9

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 20th January 2019 12:00 AM

பாடல் 9:

    காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
    பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

விளக்கம்:

    காலே மேலே காணீ காழீ காலே மாலே மே பூ
    பூ மேலே காழீ காண் நீ காலே மேலே கா

காலே=கால் அனைவரது உடலின் அடி பாகம், அதாவது உடல் தொடங்கும் இடம். மேலே= மேலே உள்ள திருமுடி; அனைவரது தலையும் உடலின் கடை பாகம். காலையும் தலையையும் குறிப்பிட்டு முதலும் முடிவுமாக இறைவன் உள்ள நிலையினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். காணி=நிலத்தின் அளவினை குறிக்க பயன்படுத்தப் படும் சொல். ஒரு காணி என்பது அரு ஏக்கர் நிலப் பரப்புக்கு சற்று குறைந்தது (0.92 ஏக்கர்) செல்வம் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. கால்=காற்று; மாலே=மயக்கம் அளிப்பவனே, அனைத்து உயிர்களையும் திரோதாயி எனப்படும் மாயத்தில் ஆழ்த்தி மயக்குபவன்; மே=மேன்மை, சிறப்பு; இரண்டாவது அடியினை பூ மேலே மாலே காலே மேலே காண் நீ காழி கா என்று மாற்றி அமைத்து பொருள் காணவேண்டும். பூ மேலே=தாமரையின் மேல் இருக்கும் பிரமன்; காண் நீ=காணும் தன்மையை நீக்கி அரியதாக மாற்றிவனே, காழி=உறுதிப்பாடு; கா=காப்பாயாக 

மாயனே என்று மணிவாசகர் அழைக்கும் செத்திலாப் பத்து பாடலை நாம் இங்கே காண்போம். மறிகடல்-அலைகள் மடங்கி வரும் கடல்; தான் விடத்தை உட்கொண்டதால் ஏனையோர் விடத்தின் தாக்கத்தால் இறவாமல் காத்தது பொருட்டு அமுதமே என்று அழைக்கின்றார். தனது குறைபாடுகளை தானே முன்வந்து உணர்த்தும் அடிகளார். அந்த குறைகளை பொருட்படுத்தாமல், தன்னை அலறவிடாமல், முக்திநெறியை காட்டுமாறு வேண்டுகின்றார்.    


    மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மணிகண்டத்து
         எம் அமுதே
    நாயினேன் உன்னை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று
         உன்னடி பணியாப்
    பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம்
         சடைப் பிஞ்ஞகனேயோ 
    சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ திருபெருந்துறை மேவிய
         சிவனே

பொழிப்புரை:

உடலுக்கு முதலும் முடிவுமாக காலும் தலையும் இருப்பது போன்று, அனைத்து பொருட்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் இருப்பவனே, அடியார்களுக்கு பெருஞ் செல்வமாக இருப்பவனே, சீர்காழி தலத்தினில் உறைபவனே, காற்று போன்று எங்கும் பரந்து இருப்பவனே, அனைத்து உயிர்களையும் திரோதாயி எனப்படும் மாயத்தில் ஆழ்த்தி மயக்கி பின்னர் அடியார்கள் அந்த மயக்கத்திலிருந்து மீண்ட பின்னர் அருள் புரிபவனே,  சிறந்து மலர்ந்து விளங்கும் தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள பிரமனும் திருமாலும், உமது திருவடியையும் திருமுடியையும் காணும் தன்மையை நீக்கி. உறுதியுடன் நீண்டு நெடிய பிழம்பாக உயர்ந்தவனே, நீர் தான் எம்மை காத்தருள வேண்டும்.

   

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 5
121. அரனை உள்குவீர் - பாடல் 4
121. அரனை உள்குவீர் - பாடல் 3
121. அரனை உள்குவீர் - பாடல் 2
121. அரனை உள்குவீர் - பாடல் 1