சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 10

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 21st January 2019 12:00 AM

 

பாடல் 10:

    வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
    தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

விளக்கம்:

    வேரியும் ஏண் நவம் காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஒகரது ஏ
    தேரகளோடு அமணே நினை ஏய் ஒழி கா வணமே உரிவே

வேரியும்=நறுமணமும்; ஏண்=பெருமையும்; நவம்=புதுமையும் காழியொயே=காழி தலத்தில் உறைபவனே, நீள்=நீண்ட; நேம்=நேயம், அன்பு; ஏனை=அன்பு அல்லாத பிறவற்றை, வெறுப்பினை, அடு=அழித்தலும் அள்=அள்ளுதலும்; யோகர் என்ற சொல் ஓகர் என்று மருவியது; ஓகரதே=யோகர்களின், யோகிகளின் செயலாகும்; தேரர்=புத்தர்; அமணர்=சமணர்; நினை=நினைத்தல்; ஏய்=பழகுதல்= ஒழி=ஒழியும்படி செய்து. கா=காக்கும்; வணம்=வண்ணம்; உரிவே=உமக்கு உரிய செயலாகும். வேரி என்பதற்கு மணம் என்று பொருள் கொண்டு தெய்வீக மணம் கமழும் சீர்காழி என்று கூறுவதும் பொருத்தமே. 

இந்த பாடலில் புத்தர் சமணர்களை குறிப்பிடும் சம்பந்தர், சிவயோகிகளின் தன்மையையும்  குறிப்பிடுகின்றார். அன்பினை வளர்த்தும் அன்பு அல்லாத வெறுப்பினை ஒழித்தும் வாழும் யோகிகளின் தன்மைக்கு மாறுபாடாக புத்தர்களும் சமணர்களும் செயல்பட்ட தன்மை பெரிய புராணத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் மீது வெறுப்பினை தூண்டும் வண்ணம் பொய் பிரச்சாரங்கள் செய்து வந்த சமணர்கள் எவ்வாறு சிவனடியார்களை வெறுத்தனர் என்பதையும் எவ்வாறு சிவனடியார்களுக்கு துன்பம் இழைத்தனர் என்பதையும் நாம் தண்டியடிகள் புராணம், நமிநந்தியடிகள் புராணம், திருநாவுக்கரசர் புராணம் மற்றும் திருஞானசம்பந்தர் புராணம் ஆகியவற்றில் காண்கின்றோம். தெளிச்சேரி தலத்தின் திருஞானசம்பந்தர் சென்ற போது புத்தர்கள் எவ்வாறு தங்களது வெறுப்பினை காண்பித்தனர் என்பதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். அவர்கள் மீது வெறுப்பினை காட்டாமல் அன்புடன் நாயன்மார்கள் இருந்தமையும் நமக்கு புலானாகின்றது. இந்த வேறுபாடு தான், சிவனடியார்களுக்கு அவர்களுக்கும் இடையே இருந்த வேறுபாடு தான், இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானின் தன்மை அன்பு. அன்பினுக்கு மாறாக பகைமை உணர்வினை தூண்டும் சமணர்கள் மற்றும் புத்தர்களுடன் சேர்வது பெருமானுக்கு உகந்தது அல்ல. எனவே அன்பு வழியில் செயல்படும் பெருமான் தான் நம்மை சிவநெறியில் பொருந்தி நிலையாக நிற்குமாறு காக்கவேண்டும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  

பொழிப்புரை:

பூஞ்சோலைகளை மிகுதியாக கொண்டுள்ளமையால் சிறந்த நறுமணத்துடனும், தெய்வீக மணமும் மற்றும் பெருமையுடனும் புதுமையுடனும் விளங்கும் காழி தலத்தில் உறையும் பெருமானே, நீண்ட அன்பினை அள்ளி அள்ளிக் கொடுத்தும், அன்பு அல்லாத வெறுப்பினை முற்றிலும் அழித்தும் செயல்படுவது யோகிகளின் தன்மையாகும். இந்த தன்மைக்கு மாறாக செயல்பட்ட புத்தர்கள் மற்றும் சமணர்களின் உபதேசங்களை நினைத்தலும், அவர்களோடு பொருந்தி பழகுவதையும், உலகத்தாரே நீங்கள் தவிர்ப்பீர்களாக; அத்தகைய நெறிகளில் சாராமல் நம்மை காக்கும் திறமை சிவபெருமானுக்கே உரியதாகும், எனவே பெருமானே, சமணர் மற்றும் புத்தர்களின் நெறியில் நாங்கள் சாராமல் இருக்கும் எங்களை வண்ணம் எங்களை காத்து அருள்வாயாக.

 

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 9
121. அரனை உள்குவீர் - பாடல் 8
121. அரனை உள்குவீர் - பாடல் 7
121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5