சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

118. யாமாமாநீ யாமாமா - பாடல் 11

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 22nd January 2019 12:00 AM


பாடல் 11:

    நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே

விளக்கம்:

    நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நல் நீயே நல் நீள் ஆய் உழி கா
    காழியுளானின் னையே நினையே தாழ் இசையா தமிழ் ஆகரனே

நேர்=நேர்மையை; அகழ் ஆம்=தோண்டி எடுத்து வெளியே எரியக்கூடிய; இதய ஆசு=இதயத்தின் குற்றங்கள், காமம் வெகுளி மயக்கம் எனப்படும் குற்றங்கள்; அழி=அழிக்கும் வல்லமை படைத்தவனே, தாய்=தாயாய் இருக்கும் தன்மை; ஏல்=பொருந்தும் வண்ணம்; நல் நீயே=நன்மையை புரிபவன்; நீள்=மிகுந்தவன், நற்குணங்கள் மிகுந்தவன்; ஆய் உழி கா=தளர்ச்சி ஏற்படும் தருணங்களில் காப்பாயாக; காழியுளானின்=சீர்காழி தலத்தில் உள்ள சிவபெருமானின் பெருமைகளை; நையே=மனம் நைந்து உருகும் வண்ணம்; நினையே=நினைப்பீர்கள்; தாழ்=புகழ்; இசையா=தாழாது நிலைத்து நிற்கும்' தமிழ் ஆகரன்=தமிழுக்கு உறைவிடம் ஆகா இருக்கும் ஞானசம்பந்தன். 

பொதுவாக பதிகத்தின் கடைக்காப்பு பாடலில், பதிகத்தினை ஓதும் வல்லமை படைத்தவர்களை குறிப்பிட்டு அதனால் அதனால் அவர்கள் பெறுகின்ற பலன்களை கூறுவது சம்பந்தரின் பழக்கம். வல்லவர்கள் என்று அவர், பதிகத்தினை நன்கு கற்றுச் தேர்ந்து பொருளை முழுவதுமாக புரிந்து கொண்டு தவறேதும் இல்லாமல் பாடும் திறமை படைத்தவர்களை குறிப்பிடுவார். மற்ற பதிகங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட இந்த பதிகத்தினை தவறின்றி பாடுவதும் கடினம், பொருளினை முழுவதுமாக புரிந்து கொண்டு மனதினில் நிலை நிறுத்துக் கொள்வதும் கடினம் என்பதால், இந்த பதிகத்தை நினைத்தாலே நமது புகழினுக்கு குறை ஏதும் ஏற்படாது என்று கூறினார் போலும்.          

பொழிப்புரை:

எம்மிடம் இருக்கும் நேர்மை எனப்படும் உயர்ந்த குணத்தினை, அறவே தோண்டி எடுத்து வெளியே எரியும் வல்லமை கொண்ட காமம் வெகுளி மயக்கம் ஆகிய நமது மனதில் எழும் குற்றங்களை அழிக்கும் வல்லமை படைத்தவனே, அனைத்து உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கும் தன்மையை ஏற்றுக்கொண்டு நன்மை புரிவதில் உயர்வாக இருப்பவனே, நாங்கள் தளர்ச்சி அடையும் நேரங்களில் எங்களை காப்பாயாக. தமிழுக்கு உறைவிடமாக விளங்குவதால் தமிழாகரன் என்ற பெயரினைப் பெற்றுள்ள ஞானசம்பந்தன் சீர்காழிப் பதியில் உறையும் சிவபெருமானின் பெருமைகளை மனம் உருகும் வண்ணம் இயற்றியுள்ள இந்த பாடல்களை நினைக்கும் அடியார்கள் தங்களது வாழ்வினில் அடைந்துள்ள புகழினுக்கு எந்தவிதமான குறையும் இன்றி வாழ்வார்கள்.       

முடிவுரை:

வியத்தகு புலமை உடையவராக சொல் நயமும் பொருள் நயமும் பொருந்தியதும், மாலை மாற்று வகையில் மிகவும் அழகாக அமைந்துள்ள இந்த பாடலை படிக்கும் நமக்கு மலைப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பாடலை ஞானசம்பந்தர் மூலம் அளித்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ள பெருமானின் கருணை தான் எத்தகையது. அவனது பெருமையையும் கருணையையும் எண்ணி மனம் மகிழும் நாம், இந்த பதிகத்தினை நன்கு கற்று வல்லவராக. அதற்குரிய கௌசிகம் பண்ணில் பாடி பெருமானின் அருளைப் பெறுவதுடன் தமிழின் பெருமையையும் பறை சாற்றுவோமாக.   

 

More from the section

121. அரனை உள்குவீர் - பாடல் 9
121. அரனை உள்குவீர் - பாடல் 8
121. அரனை உள்குவீர் - பாடல் 7
121. அரனை உள்குவீர் - பாடல் 6
121. அரனை உள்குவீர் - பாடல் 5