புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

124. வரமதே கொளா - பாடல் 1

By என். வெங்கடேஸ்வரன்| Published: 18th March 2019 12:00 AM


பின்னணி:

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் சிலவற்றை  மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலை மாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) திருவெழுகூற்றிருக்கை (1.128) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஈரடி என்ற வகையில் அமைந்துள்ள இந்த திருப்பதிகத்தை சிந்திப்போம். அதற்கு முன்னர் இந்த வகைப் பதிகத்தை குறிப்பிடும் சேக்கிழாரின் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

    செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
    வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்  
    சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

மேற்கண்ட பெரியபுராணப் பாடலில் ஈரடி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பொதுவாக தேவாரத் திருப்பதிகங்கள் நான்கு அடிகள் கொண்டவையாக அமைந்துள்ளன. இதற்கு விதிவிலக்காக நான்கு பதிகங்கள் இரண்டடிகள் கொண்டு உள்ளன. அத்தகைய ஒரு பதிகம் தான் மாலைமாற்று என்று அழைக்கப்படும் (3.117) பதிகமாகும். மற்றைய மூன்று பதிகங்களும் (3.110, 111 & 112) பழம்பஞ்சுரம் பண்ணில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த பதிகங்கள் முறையே சீர்காழி, திருவீழிமிழலை மற்றும் பல்லவனீச்சரம் ஆகிய தலங்கள் மீது அருளப்பட்டுள்ள பதிகங்கள் ஆகும். இந்த மூன்று பதிகங்களில் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்ட இந்த ஒரு பதிகம் தான் பன்னிரண்டு பாடல்களை கொண்டதாக விளங்குகின்றது. மற்ற மிறைக்கவிகளைப் போன்று இந்த பதிகத்திலும் சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களும் உணர்த்தப் படுகின்றன. மேலும் பெரும்பாலான சம்பந்தர் பதிகங்களில் இடம் பெறும் இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்கள் பற்றிய குறிப்பு மற்றும் பதிகம் ஓதுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள் ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பதிகத்தின் பாடல்களில் மற்றொரு சிறப்பினையும் காணலாம், ஒவ்வொரு பாடலிலும் வரும் தலத்து பெயரின் இரண்டாவது எழுத்து ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். இந்த தன்மையை நாம் அந்தந்த பாடல்களில் விளக்கத்தில் காணலாம். மேலும் அந்தந்த பாடலின் பல சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதையும் நாம் உணரலாம்.        

பாடல் 1:

    வரமதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரம நற்புரத்து
    அரன் நாமமே பரவுவார்கள் சீர் விரவு நீள் புவியே

விளக்கம்:

கொளா=கொள்ளாமல்; உரம்=வலிமை; கடுமையான தவம் செய்து பெற்ற வரங்களை அடுத்தவர்களின் நலனுக்காக பயன்படுத்துவது சான்றோர்களின் செய்கை. ஆனால் திரிபுரத்து அர்க்கர்களோ தாங்கள் பெற்ற வரங்களைத் தங்களது வலிமையை அதிகரித்துக் கொள்ளவும், அவ்வாறு பெற்ற வலிமை கொண்டு அடுத்தவருக்கு துன்பம் இழைத்து மகிழவும் பயன்படுத்தினார்கள். அத்தகையோர் முடிவில் அழிவினையே அடைவார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, முப்புரத்தவர்களின் கோட்டைகள் எரிக்கப்பட்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பரவுதல்=புகழுதல்; விரவுதல்=கலத்தல்; நீள்புவி= அகன்ற உலகம். பிரமபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ர. இந்த எழுத்து இந்த பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். மேலும் பல சீர்களில் இந்த எழுத்து இரண்டாவதாக வருகின்றது. இந்த பாடல் பிரமநற்புரம் என்று வருகின்றது. அதனை நற் பிரமபுரம் என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். அடியார்களுக்கு பல நன்மைகள் புரியும் தலம் என்பது இந்த தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.  
.   
பொழிப்புரை:

கடுமையான தவங்கள் இருந்து பெற்ற வரங்களை நல்ல வழியில் பயன்படுத்தி பலருக்கும் நன்மை செய்து மகிழாமல், தாங்கள் பெற்றிருந்த வரங்களை தங்களது வலிமையின் வெளிப்பாடாக காட்டி பலருக்கும் துன்பம் இழைத்த திரிபுரத்து  அரக்கர்களின் வலிமையான மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த பெருமான், பல நன்மைகளை அடியார்களுக்கு அளிக்கும் பிரமபுரம் என்ற தலத்தில் உறைகின்றான். இந்த தலத்தில் உறையும் அரனின் திருநாமத்தைச் சொல்லி அவனைப் புகழும் அடியார்களின் புகழ் இந்த அகன்ற நிலவுலகம் எங்கும் பரவும்.      

  

More from the section

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 11
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 10
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 9
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 8
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 7