புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

124. வரமதே கொளா - பாடல் 2

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 19th March 2019 12:00 AM

 

பாடல் 2:

    சேணுலா மதில் வேணு மண்ணுளோர் காண மன்றலார் வேணு நற்புரத்து
    தாணுவின் கழல் பேணுகின்றவர்கள் ஆணி ஒத்த்வரே

விளக்கம்:

வேணு=வேண்டும்; மண்ணுளோர்=நிலவுலகத்தில் உள்ள அடியார்கள்; ஆணி=ஆணிப்பொன்; சேண்=தொலைவு, இங்கே தொலைவில் உள்ள ஆகாயம்; சேணுலா=ஆகாயத்தை அளாவும் வண்ணம் உயர்ந்த மதில்கள்; மன்றல்=நறுமணம்; ஆர்=பொருந்திய;; வேணு=மூங்கில் ஏணி இந்திரன் உள்ளிட்ட பல தேவர்கள் சூரபதுமனுக்கு அஞ்சியவர்களாக இங்கே வந்து புகலிடம் அடைந்ததை உணர்த்தும் வண்ணம், பூவுலகத்தவர் காண தேவர்கள் இறங்கி வர உதவிய மூங்கில் ஏணி போன்று உயர்ந்த மதில்கள் கொண்ட நகரம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தாணு=நிலையாக உயர்ந்து நிற்கும் கம்பம்; அடியார்கள் பற்றுக் கொள்வதற்கு உதவியாக என்றும் அழியாது உயர்ந்து நிற்கும் சிவபெருமான்; பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதை கொடி கொம்பினைத் தழுவி நிற்பது போல் என்று கூறுவார்கள். அனைத்து உயிர்களையும் பெண்ணாக பாவித்து, நமக்கு தலைவனாக விளங்குகின்ற பெருமான் நிலையான கம்பம் போன்று நாம் பற்றிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் நிலை தாணு என்ற திருநாமம் மூலம் உணர்த்தப் படுகின்றது. தாணு என்ற சொல்லுக்கு உலகினைத் தூண் போன்று தாங்கும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். வேணுபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ணு. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. பொற்கொல்லர்கள் மாற்று காண்பதற்கு உதவும் ஆணிபொன் தரத்தில் மிகவும் உயர்ந்தது மேலும் மிகவும் அரியது. அத்தகைய ஆணிப்பொன் போன்று உயர்ந்தவனாகவும் மிகவும் அரியவனாகவும் பெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.  

பொழிப்புரை:

வானத்தை அளாவிய உயர்ந்த மதில்கள், நிலவுலகத்தவர் காணும் வண்ணம் விண்ணவர்கள் சீர்காழி வந்து சூரபதுமனுக்கு அஞ்சி மறைந்திருந்து இறைவனை வழிபடும் வண்ணம் உதவிய உயர்ந்த மூங்கில் ஏணிகளைப் போன்று விளங்கிய மதில்களையும் நறுமணம் கமழும் சோலைகளையும் உடையதும் அடியார்களுக்கு பல நன்மைகள் புரிவதும் ஆகிய வேணுபுரம் என்ற அழைக்கப்படும் தலத்தில் உறையும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், பொன்னின் மாற்றினை அறிய பயன்படும் ஆணிப்பொன் போன்று உயர்ந்தவர்கள் ஆவார்கள்.      

 

More from the section

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 11
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 10
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 9
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 8
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 7