சனிக்கிழமை 20 ஜூலை 2019

இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதித்தது ஐசிசி!

By எழில்| DIN | Published: 12th July 2019 02:14 PM

 

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது. 

இந்நிலையில் ஐசிசி விதிமுறையை மீறிய குற்றத்துக்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி பெற உதவினார் ஜேசன் ராய். எனினும் அவர் எதிர்பாராத விதத்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய பந்து லெக் சைட் பக்கம் வந்தபோது அதை அடிக்க முயன்றார் ராய். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதற்கு கேட்ச் அப்பீல் கோரினார்கள் ஆஸி. வீரர்கள். அதை ஏற்றுக்கொண்ட கள நடுவர் தர்மசேனா, ராயை அவுட் என அறிவித்தார். இதனால் மிகவும் கோபமுற்ற ராய், தர்மசேனாவிடம் விவாதம் செய்தார். அதை நீங்கள் வைட் என அறிவித்திருக்கவேண்டும் என்று தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டினார். சதமடிக்கும் நல்ல வாய்ப்பு இருந்ததை நடுவர் பறித்ததாக அவர் உணர்ந்தார். 

இந்நிலையில் ஜேசன் ராயின் இந்த நடவடிக்கை ஐசிசி விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதாக அவருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவரிடம் ஐசிசி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டதால் இரு அபராதப் புள்ளிகளுடன் ஆட்ட ஊதியத்திலிருந்து 30% அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு அபாரதப் புள்ளி பெற்றார் ராய். இத்துடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஒரு வீரர் ஒரே ஆட்டத்தில் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றால் தான் அவரால் அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாமல் போகும். ஆனால், இரு ஆட்டங்களில் மொத்தமாக 3 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளதால் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஜேசன் ராய் விளையாட எவ்விதத் தடையும் ஏற்படவில்லை. 

Tags : Jason Roy ICC Code of Conduct breach

More from the section

பென் ஸ்டோக்ஸ் அந்த 4 ரன்களை நிராகரித்தார்: சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீரர்
இறுதிப்போட்டி குறித்து சேவாக், மைக்கெல் வான் இடையே லடாய்
சூப்பர் ஓவரும் 'டை'? இந்த நடைமுறையை கடைபிடிக்கலாம்: சச்சின் கருத்து
டெண்டுல்கரின் உலகக் கோப்பை அணியில் தோனிக்கு கல்தா
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை