திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பெர்த் டெஸ்ட்: 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி., முன்னிலை

DIN | Published: 16th December 2018 06:22 PM
புகைப்படம்: ஐசிசி/டிவிட்டர்


பெர்த்தில் நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 283 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 43 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி இந்தியப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் திணறியது. பின்ச் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் பந்து கையில் பட்டு காயத்தை ஏற்படுத்த ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். 

இதைத்தொடர்ந்து, முதல் விக்கெட்டாக ஹாரிஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மார்ஷ் 5, ஹேண்ட்ஸ்கோம்ப் 13, ஹெட் 19 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி சற்று நெருக்கடியை சந்தித்தது. 

அதன்பிறகு, 3-ஆவது நாள் ஆட்டநேரம் முடியும் வரை கவாஜாவும், பெய்னும் விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினர். அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோதிலும், 3-ஆவது நாள் ஆட்டம் முடியும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்து 175 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி சார்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், பூம்ரா மற்றும் இஷாந்த் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

More from the section

ஆஸி. ஓபன்: பெடரர் அதிர்ச்சித் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன்: நடப்பு சாம்பியன் பெடரர், ஏஞ்சலீக் கெர்பர், ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
ஐசிசி டுவிட்டர் கவர் பக்கத்தில் தோனி படம்
இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: தமிழகம் சாம்பியன்