செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

குக் போல ஓய்வு அறிவித்துவிட்டு பிறகு சதமடித்த ‘கில்லி’ பேட்ஸ்மேன்கள்!

By எழில்| DIN | Published: 11th September 2018 12:30 PM

 

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய வசனம். ஆனால் இதுவே என் கடைசி டெஸ்ட் என்று முன்பே அறிவித்துவிட்டு அந்தக் கடைசி டெஸ்டில் சதமடித்த கில்லிகளும் உண்டு. நேற்று சதமடித்த குக் போல. 

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரான முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக், இந்தியாவுடன் நடைபெறும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 71 ரன்களை எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 147 ரன்களுடன் தனது கடைசி டெஸ்டில் இருந்து விடை பெற்றார். கடந்த 2006-இல் நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாம் இன்னிங்ஸில் குக் சதமடித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸி வீரர்கள் ரெஜினால்ட் டப், பில் போன்ஸ்போர்ட், கிரேக் சாப்பல், இந்திய வீரர் அஸாருதீன் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளனர். 

161 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற குக் 33 சதங்கள், 57 அரை சதங்களுடன் 12472 ரன்களை அடித்துள்ளார். மேலும் தொடர்ந்து 158 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். குக்கை இந்திய வீரர்கள் கேப்டன் கோலி தலைமையில் பாராட்டி வழியனுப்பினர்.

ஓய்வு அறிவித்துவிட்டு, பிறகு கடைசி டெஸ்டில் சதமடித்த வீரர்கள்

ராமன் சுப்பா ரோவ் (1961, இங்கிலாந்து), ரன்கள்: 12, 137. 
சோமொர் நர்ஸ் (1969, மே.இ.), ரன்கள்: 258.
கிரேக் சேப்பல் (1984, ஆஸ்திரேலியா),  ரன்கள்: 182.
ஜாக் காலிஸ் (2013, தென் ஆப்பிரிக்கா) ரன்கள்: 115.
பிரண்டன் மெக்கல்லம் (2016, நியூஸிலாந்து) ரன்கள்: 145, 25.
அலாஸ்டர் குக் (2018, இங்கிலாந்து), ரன்கள்: 71, 147.

Tags : Alastair Cook Final Test centurions

More from the section

இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
உலகக் கோப்பை கிரிக்கெட்: நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கோலி களமிறங்க வாய்ப்பு