செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ஓய்வு பெறுகிறார் சர்தார் சிங்: 12 ஆண்டுகள் விளையாடியவர்

DIN | Published: 13th September 2018 01:03 AM

இந்தியாவுக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அண்மையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தோடு திரும்பியது. இதன் பின்னணியில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்தார் சிங் புதன்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். நாட்டுக்காக போதிய அளவு ஆடியுள்ளேன். சண்டீகரில் உள்ள எனது குடும்பத்தினர், ஹாக்கி இந்தியா, நண்பர்களுடன் ஆலோசனை செய்த பின் ஓய்வு முடிவை மேற்கொண்டேன் என்றார் சிங்.
சர்தாரின் வயது காரணமாக ஆட்டத்திறன் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ஜகார்த்தா போட்டியின் போது, தனக்கு இன்னும் ஆடும் காலம் உள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் வரை ஆடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையே உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமில் இடம் பெறும் வீரர்கள் பட்டியலில் சர்தார் பெயர் இல்லை. கடந்த 2006-இல் தேசிய அணியில் இடம் பெற்ற அவர் 350 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2008-இல் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் சர்தார்.

 

More from the section

இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
உலகக் கோப்பை கிரிக்கெட்: நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கோலி களமிறங்க வாய்ப்பு