சனிக்கிழமை 23 மார்ச் 2019

இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019

DIN | Published: 19th February 2019 01:12 AM


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2019 தொடங்க இன்னும் 100 நாள்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து, 
முன்னாள் சாம்பியன் இந்தியா உள்ளிட்டவை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கணிக்கப்பட்டுள்ளன. 
கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
மே.இ.தீவுகள் தொடர்ந்து 1975, 1979-இல் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றது. 
அதன் பின் 1983-இல் கிரிக்கெட் உலகே அதிர்ச்சி அடையும் வகையில் மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெற்றன.
பின்னர் இந்தியாவில் 1987-இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 1992-இல் பாகிஸ்தான் பட்டம் வென்றது. இப்போட்டியில் தான் முதன்முறையாக தென்னாப்பிரிக்க அணி பங்கேற்றது. 1996-இல் இலங்கையும் பட்டம் வென்றிருந்தன.

அதிர்ஷ்டமில்லாத இங்கிலாந்து...
உலகக் கோப்பை சாம்பியன் போட்டிகளை அதிக முறை நடத்தியும், 1979, 1987, 1992-ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கும் முன்னேறிய இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை பட்டம் எட்டாகக் கனியாகவே உள்ளது. தற்போது ஒருநாள் ஆட்ட தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ள நிலையில் சொந்த மண்ணில் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. மொர்கன், ஜோ ரூட், ஜேஸன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், போன்ற அதிரடி வீரர்களுடன் உள்ளது இங்கிலாந்து.

மே. 30-இல் தொடக்க ஆட்டம்
வரும் மே. 30-இல் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே லண்டன், கென்னிங்டன் ஓவலில் தொடக்க ஆட்டம் நடக்கிறது.
இந்தியாவின் துவக்க ஆட்டம் ஜூன் 5-ஆம் தேதி செளதாம்ப்டனில் தென்னாப்பிரிக்காவுடன் நடக்கிறது.

ஆஸி. ஹாட்ரிக் வெற்றி
அதன் தொடர்ச்சியாக 1999, 2003, 2007-ஆம் ஆண்டுகள் என தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. 

இந்தியா 2-ஆவது முறை சாம்பியன்
மேலும் 2011-இல் போட்டியை நடத்திய இந்தியாவே இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதன்முறையாக சொந்த மண்ணில் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது இந்தியா.

ஆஸி.க்கு 5-ஆவது பட்டம்
இந்நிலையில் ஆஸி., நியூஸிலாந்து நாடுகள் இணைந்து 2015-இல் நியூஸிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

10 அணிகள் பங்கேற்பு...
இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடக்கிறது.  இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். 
முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

 48 ஆட்டங்கள்...
* 11 இடங்களில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன
* 50 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறவுள்ளது
* இந்த போட்டி தொடங்க இன்னும் 100 நாள்களே உள்ளன

ரவுண்ட் ராபின் ஆட்டங்கள்...
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள்

பங்கேற்கும் அணிகள்
ஆப்கானிஸ்தான் 
கடந்த 2015 முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அபார முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2018-இல் பிரபலமான அணிகளையும் வீழ்த்தியுள்ளது. அதன் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் கூடுதல் பலத்தை தருகிறார்.
ஆஸ்திரேலியா
5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா சுற்று வலுகுறைந்த நிலையிலேயே உள்ளது. குறிப்பாக ஸ்மித், டேவிட் வார்னர் தடை நீங்கி இடம் பெற்றால் மட்டுமே அந்த அணி பழைய பொலிவுடன் காணப்படும்.
வங்கதேசம்
வங்கதேச அணியும் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் ஆடி வருகிறது. ஜாம்பவான் அணிகள் எனக் கூறப்படுபவை எல்லாம் அதனுடன் தோல்வி கண்டு வருகின்றன. மொர்டஸா, தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து
இந்த முறை அதிர்ஷ்டக்காற்று தங்கள் பக்கம் வீசும் என நம்பிக்கையுடன் உள்ளது போட்டியை நடத்தும் இங்கிலாந்து. அதற்கேற்ப ஒருநாள் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. முதன்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா
அபார பார்மில் உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் துடிப்பில் உள்ளது. ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கூட்டணி எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும். ரோஹித், தவன், ராயுடு, கோலி, தோனி, என பலமான பேட்டிங் வரிசையோடு உள்ளது.
நியூஸிலாந்து
ஒரு முறை இறுதிச் சுற்று, 6 முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிறப்புடைய நியூஸிலாந்து அணியும், தற்போது பலமாக உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர், கப்டில் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள், பெளல்ட், பெர்குஸன், செளதி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது.
பாகிஸ்தான்
எப்போதுமே கணிக்க முடியாத அணி எனக் கூறப்படும் பாகிஸ்தான் இரண்டாவது முறையாக பட்டம் வெல்ல காத்துள்ளது. கேப்டன் சர்பராஸ் அகமது, முகமது ஆமீர், பாபர் ஆஸம், ஹாஸன் அலி போன்றவர்கள் ஆட்டம் சாதகமான அம்சமாகும்.
தென்னாப்பிரிக்கா
உலகக் கோப்பையை பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாத இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா ஆகும். பங்கேற்ற முதல் போட்டியிலேயே அரையிறுதி வரை முன்னேறியது. தொடர்ந்து 4 முறை அரையிறுதியில் ஆடிய அந்த அணியும் முதன்முறையாக சாம்பியன் ஆகும் தவிப்பில் உள்ளது.
இலங்கை
கடந்த 1996-இல் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஊழல், முறைகேடு புகார்களால் ஆட்டம் கண்டுள்ள இலங்கை அணி, கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் ஆட்டங்களில் பெரிய வெற்றியை பெறவில்லை. லஸித் மலிங்கா மட்டுமே அனுபவ வீரராக உள்ளார். 
மே.இ.தீவுகள்
ஒரு காலத்தில் மற்ற அணிகள் எதிர்த்து ஆடவே அச்சமுற்ற பலமான அணியாக இருந்த மே.இ.தீவுகள் தற்போது பெருமை இழந்து காட்சி தருகிறது. 2 முறை சாம்பியனான அது 2019 உலகக் கோப்பைக்கு தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் தேர்வு பெற்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டது மே.இ.தீவுகள். கிறிஸ் கெயில், ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய் ஹோப், ஜேஸன் ஹோல்டர், சாமுவேல்ஸ் ஆகியோர் நம்பிக்கை தரும் வீரர்களாக உள்ளனர்.

More from the section

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்
பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு