சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

நான்காம் சுற்றில் செரீனா-சிமோனா மோதல்

DIN | Published: 20th January 2019 01:17 AM

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் நான்காம் சுற்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் உடன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப் மோதவுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இப்போட்டியில் யுஎஸ் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒஸாகா நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் அவர் தைவானின் ஹை சு வெய்யை 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். 

செரீனா வில்லியம்ஸ்: மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்டெரம்காவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப்பிடம் வீழ்ந்தார். 

நான்காம் சுற்றில் செரீனா-சிமோனா மோதுகின்றனர். விட்டோலினா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸாங் ஹுவாயை வென்றார். நான்காம் சுற்றில் அவர் அமெரிக்காவின் மடிசன் கீய்ஸிடம் மோதுகிறார்.

ஆடவர் பிரிவு: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 7-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் ஜவோ சூஸாவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.  
மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் டெனிஸ் ஷபலபோவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.   
இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 3 செட் கணக்கில் ஆஸி.யின் அலெக்ஸ் போல்ட்டை வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். 

அடையாள அட்டை எங்கே?

பெடரரை வழிமறித்த பாதுகாவலர்உலகிலேயே பிரபலமான டென்னிஸ் வீரராகத் திகழ்ந்தாலும் ரோஜர் பெடரரை ஆஸி.ஓபன் போட்டியில் மைதான பாதுகாவலர் மறித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸி. ஓபன் போட்டியில் ஏற்கெனவே 6 முறை பட்டம் வென்றுள்ள பெடரர், தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளார். 

மேலும் 7-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஆடி வரும் அவர், தற்போது நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் போன்ற சிறப்பை பெற்றுள்ள பெடரரை, மைதானத்தில் நுழைய முயன்ற போது, காவலர் ஒருவர் மறித்தார். அடையாள அட்டை இருந்தால் தான் அனுமதிக்க முடியும் எனத் தெளிவாக கூறிவிட்டார்.

விதிகள் அனைவருக்கும் பொதுவானவை எனவும் அப்பாதுகாவலர் கூறியுள்ளார். இதற்கு பெடரர் எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்தார். அவரது சக குழுவினர் வந்தவுடன், இணைந்து சென்றார்.

ரோஜர் பெடரருடன்- கோலி-அனுஷ்கா தம்பதி சந்திப்பு

உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரரை-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-அனுஷ்கா தம்பதி சனிக்கிழமை சந்தித்து பேசினர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தலா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி முதன்முறையாக இரட்டை தொடர் வெற்றியை பெற்று சாதனை படைத்தது. மெல்போர்னில் வெள்ளிக்கிழமை கடைசி ஒரு நாள் ஆட்டத்துடன் இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஆஸி. ஓபன் டென்னிஸ்: மெல்போர்ன் நகரில் தற்போது ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் முதல்நிலை வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 

இதற்கிடையே சனிக்கிழமை ராட்லேவர் மைதானத்தில் பெடரர் ஆடிய ஆட்டம் நடைபெற்றது. இதைக் காண்தற்காக கோலி-அனுஷ்கா தம்பதி சென்றிருந்தனர். அதே போல் ஜோகோவிச், செரீனா ஆகியோர் ஆடிய ஆட்டங்களையும் இவர்கள் கண்டு களித்தனர்.

பின்னர் நடப்பு சாம்பியன் பெடரரை நேரில் சந்தித்து இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து படம் எடுத்துக் கொண்டனர். அப்படத்தை தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ளார் விராட் கோலி. ஆஸி. ஓபனில் சிறப்பான நாளாக அமைந்தது. ஆஸி. கோடைக்காலத்தை மகிழ்ச்சியாக நிறைவு செய்தோம். என்றும் நன்றியுடன் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் ஆஸி. ஓபன் அதிகாரபூர்வ சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்திலும் மூவரது படத்தை பதிவு செய்து, 3 ஜாம்பவான்கள் ஓரே படம் என பதிவிட்டுள்ளது.

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!