சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

நியூஸிலாந்தில் சாதிக்குமா கோலியின் இந்தியப் படை?

By -பா.சுஜித்குமார்.| DIN | Published: 21st January 2019 01:11 AM

ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்ததைப் போல் நியூஸிலாந்திலும் சாதிக்குமா கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய படை  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக ஆஸி. மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதன்முறையாக 71 ஆண்டுகளில் 2-1 என டெஸ்ட் தொடரையும், பின்னர் முதன்முறையாக 2-1 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்தது. மேலும் டி20 தொடரை 1-1 என சமன் செய்து, எந்த தொடரையும் இழக்காமல் வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தது.
வரும் ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை 2019 போட்டிக்கு தயாராகும் வகையில் அடுத்து இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள், 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் ஆட உள்ளது.
அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத நிலையில் ஆஸி.அணியை வீழ்த்தியதாக விமர்சனங்கள் எழுந்தாலும், இது இந்திய அணியின் ஆட்டத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்றே விளையாட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

அபார பார்மில் நியூஸி அணி

இதற்கிடையே நியூஸிலாந்து அணி தற்போது அபாரமான பார்முடன் காணப்படுகிறது. சொந்த மண்ணில் இலங்கையை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த தெம்போடு உள்ளது. அதன் கேப்டன் கேன் வில்லியம்ஸன் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். குறிப்பாக இலங்கையுடன் ஒரு நாள் தொடரில் 2 அரை சதங்கள் உள்பட 132 ரன்களை எடுத்தார்.

ராஸ் டெய்லர் ஒரு நாள் தொடரில் 281 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் மார்ட்டின் கப்டிலும் 153 ரன்களை சேர்த்து துடிப்புடன் ஆடி வருகின்றனர். 
நியூஸி. மைதானங்கள் பொதுவாக சிறியவை. இவற்றில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது எளிதாகும். அதே நேரத்தில் பிட்ச்களும் ஆஸி. மைதானங்களைப் போலவே வேகப்பந்து வீச்சுக்கு தோதானவை. தட்டையான பிட்ச்களை கொண்டவை. ஸ்விங் பந்துவீச்சுக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் மிகவும் ஏற்றவை. இங்கிலாந்தில் நிலவும் தன்மையே நியூஸிலாந்திலும் உள்ளதால், இந்தியஅணி நிலைமையை அனுசரித்து ஆடும் என்றே கருதப்படுகிறது. மணிக்கட்டை பயன்படுத்தி வீசும் சுழற்பந்துவீச்சாளர்கள் ரன்களை அள்ளித் தரும் அதே நேரத்தில் விக்கெட்டுகளையும் இங்கு வீழ்த்த முடியும். இது குல்தீப், சஹலுக்கு சாதகமான அம்சமாகும்.

நியூஸிலாந்து இத்தொடர்களுக்கு வலுவான அணியை களமிறக்குகிறது. அதே நேரத்தில் இந்தியா பிரதான பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தந்துள்ளது. முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. 

ஒரு நாள் ஆட்டத் தொடர்

இந்திய அணி கடைசியாக கடந்த 2014-15-இல் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. இதில் 4-0 என ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா.
இரு அணிகளும் இதுவரை 98 ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியுள்ளன. இதில் இந்தியா 49-இலும், நியூஸி. 43-இலும் வென்றன. 1 டையில் முடிந்தது. 5 ஆட்டங்கள் எந்த முடிவும் தெரியவில்லை.
இரு அணிகளும் கடந்த 1976 முதல் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா 6 முறையும், நியூஸி. 4 முறையும் கைப்பற்றியுள்ளன. 

டி20 ஆட்டங்கள்

இரு அணிகளும் இதுவரை தலா 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா 2 முறையும், நியூஸிலாந்து 6 முறையும் வென்றன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியாக 2017-இல் இரு அணிகளும் டி20 ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்து சென்று சேர்ந்தது.
விராட் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையில் நியூஸிலாந்து அணியும் ஏறக்குறைய அதிரடி வீரர்கள், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் சமபலத்தில் உள்ளதால் தொடரை கைப்பற்றப் போவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

நியூஸிலாந்து அணி

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டிரென்ட் பெளல்ட், பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஸன், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லத்தம், காலின் மன்றோ, ஹென்றி நிக்கோல்ஸ், மிச்செல் சான்டர், ஐஷ் சோதி, டிம் செளதி, ராஸ் டெய்லர்.

ஒரு நாள் தொடர்

ஜன. 23-முதல் ஆட்டம், நேப்பியர், காலை 7.30.
ஜன. 26-இரண்டாம் ஆட்டம், மெளன்ட் மவுன்கை, காலை 7.30.
ஜன. 28-மூன்றாம் ஆட்டம்-மெளன்ட் மவுன்கை, காலை 7.30.
ஜன. 31-நான்காம் ஆட்டம், ஹாமில்டன், காலை 7.30.
பிப். 03-ஐந்தாம் ஆட்டம், வெலிங்டன், காலை 7.30.

டி20 தொடர்

பிப். 06-முதல் ஆட்டம், வெலிங்டன், மதியம் 12.30.
பிப்.08-இரண்டாம் ஆட்டம், ஆக்லாந்து, பிற்பகல் 11.30.
பிப.10-மூன்றாம் ஆட்டம்-ஹாமில்டன், பிற்பகல் 12.30.
 

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!