90 சதவீத பள்ளிகளுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட் தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பூஜ்யம் நேரத்தில் பாஜக உறுப்பினர் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரியாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
வறட்சி காரணமாக மாநிலத்தில் செயல்பட்டுவரும் காகித ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை அனுப்பிவைப்பதில் காலதாமதமாகிவிட்டது.
எனினும், மாநிலத்தில் உள்ள 90 சதவீத பள்ளிகளுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பாடநூல்களை அச்சிடுவதற்காக 77 நேஷனல் மில் நிறுவனத்திடம் இருந்து காகிதங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
எந்த காரணத்தை முன்னிட்டும் தனியார் பள்ளிக்கூடங்கள், பாடநூல்களை தாங்களாவே அச்சிட்டுக் கொள்ளவும், விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், தனியார் பள்ளிகள் பாடநூல்களைப் பாடநூல் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.