யாதகிரியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று கர்நாடக ஜவுளித் துறை அமைச்சர் ருத்ரப்பா மானப்பா லமானி தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் புதன்கிழமை பாஜக உறுப்பினர் அமர்நாத்பாட்டீல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறியது:
ஹைதராபாத்-கர்நாடக பகுதியைச் சேர்ந்த பெல்லாரி, கலபுர்கி, யாதகிரி மாவட்டங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹரபனஹள்ளியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.
முதல்கட்டமாக யாதகிரியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இப்பூங்காவில் பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் இடம் யாதகிரியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் யாரும் அங்கு நிறுவனங்களை அமைக்க முன்வரவில்லை.
ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு முதலீடு செய்ய முன்வருவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கலபுர்கி, பெல்லாரியிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
புதிய ஜவுளிக் கொள்கையின்படி, ஜவுளிப் பூங்காக்களில் முதலீடு செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், நிலத்தின் தொகையில் 5 சத தள்ளுபடி அளிக்கப்படும். உள்கட்டமைப்பு மீதான முதலீட்டில் 40 சத மானியம் வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.