சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சைக்கிளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ எம்.என்.விஜயகுமார் கேட்டுக் கொண்டார்.
கலிங்கா சமூக அறிவியல் மையம் தொடங்கியுள்ள ஈதல்கலை அமைப்பின் சார்பில், பெங்களூரு ஜெயநகரில் புதன்கிழமை நான்காம் ஆண்டு ஈதல்கலை நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
சைக்கிள் ஓட்டுவதை இளைஞர்களிடையே பிரபலமாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். அதனால்தான் சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால், அண்மைக் காலமாக விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்க வேண்டும் எனஇளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
இது சுற்றுச்சூழலை வெகுவாக பாதித்து வருகிறது. பெங்களூரு நகரின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, உடல் நலனுக்கும் நல்லது. சைக்கிள் பயன்பாடு அதிகரித்தால் பெங்களூரின் காற்று மாசுபடுவது தடுக்கப்பட்டு, தூய்மையாக இருக்கும் என்றார்.
சைக்கிள் பேரணியைத் தொடர்ந்து, கித்தூர் ராணிசென்னம்மா மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் தூய்மையாக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் என்.நாகராஜூ, திரைப்பட இயக்குநர்பி.சேஷாத்ரி, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.