தலித் மக்களிடம் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
ஹாவேரி மாவட்டம், ஷிக்காவி வட்டம் அம்பேத்கர் நகரில் புதன்கிழமை ஹனுமந்தப்பா கட்டிமணி என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் இல்லத்தில் காலை சிற்றுண்டி முடித்த பிறகு மக்கள் சந்திப்புப் பயணக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
கர்நாடகத்தில் வாழும் தலித் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தலித் இல்லங்களுக்குச் சென்று உணவு அருந்தி வருகிறேன். கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தலித் பிரச்னைகளுக்கு கண்டிப்பாக தீர்வுகாண்போம். தலித் வாழ்ந்து வரும் பகுதிகளுக்குச் சென்று அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவதால் என் மீது முதல்வர் சித்தராமையா கடும் கோபத்தில் இருக்கிறார். அதனால், என்னை தேவையில்லாமல் வசைப்பாடி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை முதல்வர் சித்தராமையாவால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்றார்.
முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் பசவராஜ்பொம்மை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான ஆதரவு அலை இருந்துவருகிறது. காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். அதனால் பாஜகவை நம்பிக்கையோடு மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்த்கார்ஜோள், எம்.பி. பிரஹலாத்ஜோஷி உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர், ஷிக்காவி வட்டம், பிசனஹள்ளி கிராமத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை எடியூரப்பா ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.