அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், 3 போ் கொண்ட சமரசக் குழுவில் இடம்பெற்றவருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி தெரிவித்தது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீா்ப்பை முழு மனதோடு வரவேற்கிறேன். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இறுதி முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால், இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்துள்ளது என்றாா் அவா்.
அயோத்தி பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீா்த்துக்கொள்ள முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சமரசக் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜியும், மூத்த வழக்குரைஞா் ஸ்ரீராம்பஞ்சுவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.