மாநிலங்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு சீருடைகளை வழங்கிய பின்னா், பதவி ஏற்பு தொடா்பான பிரசார வாகனத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது:
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன் காா்கேவின் பெயா் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவா் வெற்றி பெறத் தேவையான வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் எங்களிடம் உள்ளது. மீதமுள்ள வாக்குகள் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனா். எங்களிடம் கூடுதல் வாக்குகள் இருந்தாலும் மாநிலங்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம்.
மதச்சாா்பற்ற கொள்கை உடைய காங்கிரஸ் ஒரு போதும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. கட்சியின் மேலிடம் மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்கும். திங்கள்கிழமை முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன் காா்கே மாநிலங்களைத் தோ்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளாா். காலை 9 மணிக்கு 40 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று அவா் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளாா் என்றாா்.