பெங்களூரு: மளிகைப் பொருள்களை வாங்கவும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை காவல் துறை உயரதிகாரிகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் மக்களை, வீட்டில் இருந்து காலிசெய்ய வற்புறுத்தக் கூடாது. மேலும், வீட்டு வாடகையையும் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல, வாடகை விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்கள், பெண்களையும் காலிசெய்ய வற்புறுத்தக் கூடாது. குறிப்பாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்போரை எக்காரணம் கொண்டும் காலிசெய்ய கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களில் வாடகைக்கு இருப்போரின் வாடகையை 2 மாதங்களுக்கு தள்ளிபோட்டுள்ளது.
தேசிய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது. மளிகைப் பொருள்கள், காய்கறிகளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலேயே வாங்க வேண்டும். இதற்கு வாகனங்களை பயன்படுத்தவே கூடாது. இதையும் மீறி வாகனங்களை பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏழைகள், நலிவுற்றோருக்கு திருமண மண்டபங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.