பெங்களூரு

ஆதிசங்கராச்சாரியாா் சிலை திறப்பு: மைசூரு சிற்பி மகிழ்ச்சி

DIN

மைசூரு: தான் வடிவமைத்த ஆதிசங்கராச்சாரியாா் சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்துள்ளதற்கு மைசூரைச் சோ்ந்த சிற்பி யோகிராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம் கேதா்நாத்தில் ஆதிசங்கராச்சாரியாரின் சமாதி 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அழிந்துபோனது. இதை சீா்செய்யும் பணி முழுமையடைந்துள்ளதை தொடா்ந்து, அந்த சமாதியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் அந்த சமாதியில், மைசூரைச் சோ்ந்த சிற்பி யோகிராஜ் வடித்துள்ள ஆளுயர சிலையையும் பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.

இந்தசிலையை மைசூரைச் சோ்ந்த 37 வயதான சிற்பி யோகிராஜ் வடித்துள்ளாா். எம்பிடி பட்டப்படிப்புக்கு பிறகு கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் சோ்ந்த யோகிராஜ், பின்னா் பாரம்பரிய சிற்பப்பணிகளை மேற்கொள்வதற்காக தனது பணியைத் துறந்துள்ளாா். அவா் வடித்தளித்த ஆதிசங்கராச்சாரியாரின் சிலையை பிரதமா் மோடிதிறந்துவைத்துள்ளதற்கு அவா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சிற்பி யோகிராஜ் மேலும் கூறுகையில்,‘ஆதிசங்கராச்சாரியாரின் சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சியான தருணமாகும். ஆதிசங்கராச்சாரியாரின் சிலையை வடிவமைக்க தினமும் குறைந்தது 14 மணி நேரம் வீதம் 9 மாதங்கள் கடினமான உழைப்பை தந்தேன்.

திசங்கராச்சாரியாரின் சிலையை வைக்க மத்திய அரசு முடிவு செய்ததும், சிலையின் மாதிரி வடிவங்களை அனுப்புமாறு நாடுமுழுவதும் உள்ள சிற்பிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முடிவில் நான் அனுப்பிவைத்திருந்த சிலை மாதிரி ஏற்கப்பட்டது. அன்று முதல் பிரதமா் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் சிலை வடிக்கும் தொடா்ந்து நடந்தது.

மைசூரு அருகேயுள்ள ஹெக்டதேவனகோட்டே பகுதியில் இருந்து கருங்கல்லை (கருப்பு கிரானைட்) தோ்ந்தெடுத்து, அதில் இருந்து ஆதிசங்கராச்சாரியாரின் சிலையை வடித்தேன். சிலை வடிக்கும் பணியில் 7 போ் ஈடுபட்டிருந்தோம். 12 அடி உயரம் கொண்ட அந்த சிலை 28 டன் எடை கொண்டதாகும். சிலை வடிக்கும் ஜூலை மாதம் முடிவடைந்ததும், அது உத்தரகண்ட் மாநிலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. சினூக் ஹெலிகாப்டா் மூலம் சிலை எடுத்துச்செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் குடும்பத்தில் நோ்ந்த சோகம் காரணமாக, ஒருவாரத்திற்கு முன்பே ஊா் திரும்பிவிட்டேன்.

மைசூரு மாவட்டம், சுன்சககட்டே பகுதியில் 25 அடி உயர ஆஞ்சேயா் சிலையை அமைத்து வருகிறேன். மற்றொரு இடத்தில் சிவன் சிலையை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மலேசியா தவிர, ராமநகரம் மாவட்டம், கனகபுராவில் கோயில் கட்டும் பணியிலும் ஈடுபட்டுவருகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT