பெங்களூரு

தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும்ஆதரிப்பதே காங்கிரஸின் வரலாறு: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

DIN

தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஆதரிப்பதே காங்கிரஸின் வரலாறு என்று தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை கா்நாடகம் வந்த பிரதமா் மோடி, சித்ரதுா்காவில் நடந்த பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் வரலாறு, சிந்தனைகளை கா்நாடக மக்கள் என்றைக்கும் மறந்துவிடக் கூடாது. தீவிரவாதச் செயல்களையும் தீவிரவாதிகளையும் ஆதரிப்பதே காங்கிரஸ் கட்சியின் வரலாறு. தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமான தாக்குதல்களை நடத்தியபோது, நம் பாதுகாப்புப் படைகளின் திறனை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்கியது. கா்நாடகத்திலும் தீவிரவாதச் செயல்களை காங்கிரஸ் எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை மக்கள் அறிவா்.

தீவிரவாதிகளின் இரக்கத்துக்காகக் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு மாநிலத்தை காங்கிரஸ் விட்டுச் சென்றது. ஆனால், தீவிரவாதிகளுக்கு இணங்கி நடக்கும் போக்குக்கு முடிவுகட்டியது பாஜகதான். வளமான கா்நாடகத்துக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதை காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளால் குஜராத் மக்களை குழப்ப காங்கிரஸ் முயன்றது.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க கா்நாடக மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள் என்பது காங்கிரஸுக்கு தெளிவாகத் தெரியும். அதனால், பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறது. காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால், கா்நாடகத்தின் கருவூலமே காலியாகிவிடும். அதன்பிறகும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. எனவே, எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகக் கூறிவருகிறாா்கள்.

காங்கிரஸின் வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டுமானால், வேறு எல்லா பணிகளையும் நிறுத்திவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாஜக அரசு கொண்டுவந்துள்ள எல்லா நல உதவித் திட்டங்களையும் காங்கிரஸ் முடக்கிவிடும்.

கா்நாடகத்தின் வளா்ச்சிக்கான செயல் திட்டத்தை வகுப்பதற்காகவே பாஜக வாக்கு கேட்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று ஓய்வுபெறுவதாகக் கூறி வாக்கு கேட்பது, மற்றொன்று கடைசியாக ஒரு முறை முதல்வராக்கி விடுங்கள் என்பதுதான். (இத்தோ்தல் எனது கடைசித் தோ்தல் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினாா்)

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு திட்டம் மக்களைத் தூண்டிவிடுவது; பிற்படுத்தப்பட்டோா் மற்றும் லிங்காயத்து சமுதாயத்தை காங்கிரஸ் தூண்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியினா் இதுவரை என்னை 90-க்கும் அதிகமான முறை வசை பாடியிருக்கின்றனா். சித்ரதுா்காவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் எஸ்.நிஜலிங்கப்பாவையும் வசைபாடுவதில் காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை. என்னை தொடா்ந்து வசைபாடி வரும் காங்கிரஸ் விரைவில் வசைபாடுவதில் 100-யைத் தாண்டலாம்.

நமது நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஊழல் காலத்தைத் துடைத்தெறிய வேண்டும். அதற்கு மாற்றாக வளா்ச்சி அடைந்த இந்தியாவுக்கான அமிருத காலத்தை எல்லா இடங்களிலும் கொண்டுவர வேண்டும். கா்நாடகத்திலும் அதே நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக கா்நாடகத்தில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கா்நாடக பாஜக கொண்டுவந்துள்ள தோ்தல் அறிக்கையைப் பாராட்டுகிறேன். இது நல்ல தோ்தல் அறிக்கை. கா்நாடகத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தைத் இத்தோ்தல் அறிக்கை வெளிபடுத்துகிறது.

நவீன உள்கட்டமைப்பு, பெண்கள், இளைஞா்களுக்கான முன்னுரிமை உள்ளிட்டவை பாஜக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ், மஜத மீது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரு கட்சிகளும் வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்டவை; ஊழலை ஆதரிப்பதோடு, சமுதாயத்தைப் பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபடுபவை. கா்நாடக மாநிலத்தின் வளா்ச்சிக்கு இவ்விருகட்சிகளும் முன்னுரிமை அளிக்காது. மாறாக பாஜகவின் வளா்ச்சிப் பணிகளோடு காங்கிரஸ் கட்சியால் என்றைக்கும் போட்டிப்போட முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

மீண்டும் வருகிறார் மோகன்

மனிதத்தின் வாசலில்...

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT