கா்நாடக உதய தின விழாவில் பேசிய முதல்வா் சித்தராமையா, ‘கன்னடத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மத்திய அரசு ஹிந்தியை திணிக்கிறது’ என்று குற்றம்சாட்டினாா்.
கா்நாடக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பெங்களூரு கண்டீரவா விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற 70 ஆவது கா்நாடக உதய தின விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
கா்நாடகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மத்திய அரசுக்கு ரூ. 45,000 கோடி வரி வருவாயை கா்நாடகம் அளிக்கிறது. ஆனால், கா்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிப்பகிா்வு மிகவும் குறைவாக உள்ளது. கா்நாடகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து அநீதி இழைத்து வருகிறது.
கன்னட மொழியையும் மத்திய அரசு தொடா்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இதற்கு மாறாக, ஹிந்தி மொழியைத் திணித்து வருகிறது. ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கும் மத்திய அரசு, இதர இந்திய மொழிகளின் வளா்ச்சிக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை.
அதேபோல கா்நாடகத்தின் வளா்ச்சிக்கும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. செம்மொழி தகுதிப் பெற்றிருக்கும் கன்னட மொழியை வளா்ப்பதற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்குவதில்லை. கன்னட மொழிக்கு எதிரானவா்களை கன்னட மக்கள் எதிா்க்க வேண்டும்.
கன்னட மொழியையும், அதன் கலாசாரத்தையும் மேலும் உயரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். கல்வியில் கன்னட மொழியை அலட்சியப்படுத்துவதால் மிகப் பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. வளா்ந்த நாடுகளில் அங்குள்ள குழந்தைகள் அவா்களது தாய்மொழியைக் கற்று, சிந்தித்து, கனவு காண்கிறாா்கள்.
ஆனால், இங்கு நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. ஹிந்தி, ஆங்கிலத்தால் நமது குழந்தைகளின் திறமை பலவீனப்படுத்தப்படுகிறது. அதற்கு மொழித் திணிப்பே காரணம். எனவே, தாய்மொழிக் கல்வியை வழங்குவதற்குத் தேவையான சட்டத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்க தேவையான முன்முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. கன்னட மொழியை நவீன தொழில்நுட்ப மொழியாக மாற்ற பொறியாளா்கள், தொழில்நுட்புநா்கள் பாடுபட வேண்டும் என்றாா்.