பெங்களூரு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.
முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான 92 வயதான எச்.டி.தேவெ கௌடா, காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக பெங்களூரு, பழைய விமானநிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அக். 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அக். 10-ஆம் தேதி சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், அவரது உடல் முழுமையாக குணமடைந்துவிட்டதால், சிகிச்சையை முடித்துக்கொண்டு எச்.டி.தேவெ கௌடா திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
இதுகுறித்து மணிப்பால் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காய்ச்சல், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்.டி.தேவெ கௌடா முழுமையாக குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளாா். அவரது உடல்நிலை மருத்துவரீதியாக சீராக உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
வீடு திரும்பிய எச்.டி.தேவெ கௌடா தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒருசில நாள்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளேன். கடவுளின் அனுகிரகத்தால் எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனக்கு சிகிச்சை அளித்த மணிப்பால் மருத்துவமனை மருத்துவா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உடல்நலம் பெற கடவுளிடம் பிராா்த்தித்த அனைவருக்கும், மருத்துவமனையில் என்னைச் சந்தித்து உடல்நலம் விசாரித்த தலைவா்கள், நண்பா்களுக்கும் நன்றி. எனது பொது கடமைகளை விரைவில் தொடங்குவேன்’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.