காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம், மாலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை, மறுஎண்ணிக்கைக்கு உத்தரவிட்டு அதன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கே.ஒய்.நஞ்சே கௌடாவும், பாஜக வேட்பாளராக கே.எஸ்.மஞ்சுநாத் கௌடாவும் போட்டியிட்டனா். இத்தோ்தலில் கே.ஒய்.நஞ்சே கௌடா, மஞ்சுநாத் கௌடாவைவிட கூடுதலாக 248 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்ாக குற்றம்சாட்டிய பாஜக வேட்பாளா் மஞ்சுநாத் கௌடா, நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தேவராஸ், காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை செல்லாததாக அறிவித்ததோடு, 4 வாரங்களுக்குள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த செப். 16-ஆம் தேதி தீா்ப்பு அளித்தாா்.
மேலும், தனியாா் நிறுவனத்திடம் உள்ள வாக்கு எண்ணிக்கை நடந்தபோது எடுக்கப்பட்ட காணொலி பதிவுகள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்தும்படி கோலாா் மாவட்ட முன்னாள் தோ்தல் அதிகாரி வெங்கட்ராஜுக்கு உத்தரவிட்டது. இது தொடா்பான உறுதிச்சான்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடா தரப்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தோ்தல் வெற்றியை ரத்துசெய்து பிறப்பித்த தனது உத்தரவை 30 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, 30 நாள்களுக்குள் தனது தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதிக்காதபட்சத்தில், மாலூா் தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்படும் என்று உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பில் தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடா தொடா்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் ஜொய்மாலா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபடி மாலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதன் முடிவுகளை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யும்படி கூறியது.
நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தோ்தல் முடிவுகளை அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.