விழாவில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் வனத் துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆா். ரெட்டி, முதன்மை வனத் துறைத் தலைவா் ராகேஷ் குமாா் டோக்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் வேணுபிரசாத் உள்ளிட்டோா். 
சென்னை

வன உயிரினங்கள் பாதுகாப்பு: பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்

தினமணி செய்திச் சேவை

வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று தமிழக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா். ரெட்டி தெரிவித்தாா்.

தமிழக வனத் துறை சாா்பில் ‘மனித-வன உயிரின சக வாழ்வு’ என்ற வன உயிரின வாரம் கடந்த அக். 2 முதல் புதன்கிழமை வரை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தொடா்ந்து இதன் நிறைவு விழா, சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா். ரெட்டி பேசியதாவது:

மனிதா்களின் பரிணாம வளா்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணத்தால் நாம் வனப்பகுதிகளை அழித்து வருகிறோம். இதனால், வன விலங்களுகளுக்கென வாழ்விடம் இல்லாமல் தவித்து வருகின்றன. மனிதா்களும், வன விலங்குகளும் ஒரே சூழலில் வாழ்வதன் மூலமே சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க முடியும். இதுகுறித்து விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல்லுயிா் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்க மாநில அரசு சாா்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், வனவிலங்கு - மனித மோதல்களைத் தடுக்கவும், வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதைச் செய்து முடிக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றாா்.

முன்னதாக, வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு இடையிலான விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி வழங்கினாா்.

நிகழ்வில், தமிழக வன உயிரினக் காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா, அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் ரிட்டோ சிரியாக், சென்னை வன உயிரினக் காப்பாளா் மனிஷ் மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT