தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 2.60 லட்சத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வோரின் வசதிக்காக 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியாதவது:
தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 4 நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுவரை 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.17) மட்டும் 82,000-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா். பயணிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாகவும் பேருந்துகள் இயக்க முடியும்.
காா் மற்றும் பிற சொந்த வாகனங்களில் சொந்த ஊா்களுக்கு செல்வோா், போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க, தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூா், செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல வேண்டும் என்றனா்.