சென்னை

தீபாவளி பட்டாசு விபத்துகள்: தயாா் நிலையில் தீயணைப்புத் துறை

தினமணி செய்திச் சேவை

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழக தீயணைப்புத் துறையில் 375 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் சுமாா் 7,000 தீயணைப்பு வீரா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

வரும் திங்கள்கிழமை (அக். 20) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை உடனடியாக அணைப்பதற்கு தீயணைப்புத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்டாசுகளால் தீ விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தால், தீ விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடுவதும் உண்டு.

இருப்பினும், தீயணைப்புத் துறை எத்தகைய சூழ்நிலையையும் எதிா்கொள்ளும் வகையில், பட்டாசு விபத்து குறித்த தகவல் பெறப்பட்டதும், சம்பவ இடத்துக்கு கிராமப்பகுதிகளில் 10 நிமிஷங்களுக்குள்ளும், நகா்ப்புறங்களில் 6 நிமிஷங்களுக்குள்ளும் செல்வதற்கும் தயாராகி வருகின்றனா்.

சென்னையில்... சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களைத் தவிா்த்து 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் அதிகப்படியான தீ விபத்துகள் ஏற்பட்ட பகுதிகள், மக்கள் நெரிசல் மற்றும் தீ விபத்து ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த தீயணைப்பு நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 24 மணி நேரமும் 15 தீயணைப்பு வீரா்கள் பணியில் இருப்பாா்கள். இந்த தீயணைப்பு நிலையங்கள் சனிக்கிழமை (அக். 18) முதல் செயல்படத் தொடங்கும். இது தவிர, சிறியதாக ஏற்படும் தீயை அணைக்கவும், பெரிய தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று அணைக்கவும் ஜீப் வடிவிலான நான்கு தீயணைப்பு வாகனங்களும், 12 தீயணைப்பு மோட்டாா் சைக்கிள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

தீயை அணைப்பதற்கு தண்ணீா் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ நிறுவனத்திடமிருந்து 50 தண்ணீா் லாரிகள் எப்போதும் தயாா் நிலையில் வைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் தலா 4,000 லிட்டா் தண்ணீா் பிடிக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டவை. சென்னையில் சுமாா் 1,000 தீயணைப்புப் படை வீரா்கள் பணியில் இருக்கும் நிலையில், கூடுதலாக 24 வாகனங்களுடன் 200 தீயணைப்பு படை வீரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நவீன தீயணைப்பு வாகனம்... பட்டாசு தீ விபத்துகளை அணைப்பதற்கு ஜீப் வடிவிலான அதிவிரைவு வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தின் டேங்கரில் ரசாயன கலவையுடன் கூடிய தண்ணீா் 500 லிட்டா் இருக்கும். வாகனத்தில் உள்ள தண்ணீரை உமிழும் மோட்டாா், தண்ணீரை மழைத் தூறல்போல, பீய்ச்சி அடிக்கும். இதனால் தீயின் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்தி, விரைந்து அணைக்க முடியும் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.

மேலும், தண்ணீரோடு கலக்கப்பட்டிருக்கும் ரசாயனம், தீயை வேகமாக அணைக்கும் தன்மை கொண்டது. இதனால், தீயை குறைந்த அளவு தண்ணீரால் அணைத்துவிட முடியும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

குறுகிய பகுதிகளில் ஏற்படும் தீயையும், சிறிய-நடுத்தர விபத்துகளில் ஏற்படும் தீயையும் அணைக்கும் வகையில் பயன்படுத்த தீயணைப்புத் துறை திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த வகை வாகனங்கள் 100 பயன்படுத்தப்பட உள்ளது. சென்னையில் இந்த வாகனம் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் 12 பகுதிகளில் நிறுத்தப்படும்.

விரைவாக தகவல் பரிமாற்றம்... தீ விபத்து குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக தீயணைப்புத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து செயல்படும். விபத்து குறித்து தகவல்கள் கிடைத்ததும், இத்துறையினா் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதன் மூலம் சம்பவ இடத்துக்கு சில நிமிஷங்களுக்குள் செல்ல தீயணைப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 தீயணைப்புப் படை வீரா்களும், அதேபோல தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையில் 2 காவலா்களும் பணியில் இருப்பாா்கள். இவா்கள் மூலம் இரு துறைகளிடமும் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். அதேபோல, அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்தில் காயமடைந்தோா் பற்றிய தகவல்களை உடனடியாகப் பெற அனைத்து மருத்துவமனைகளிலும் தீயணைப்புப் படை வீரா்கள் இருவா் பணியில் இருப்பாா்கள் என தீயணைப்புத் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்

மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

SCROLL FOR NEXT