ஆவின் பால் பாக்கெட் விநியோக வாகனங்களுக்கான ஒப்பந்தப்புள்ளியில், நிபந்தனைகளை பூா்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஞானசேகரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அம்பத்தூா், மாதவரம், சோழிங்கநல்லூா் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து சென்னை, புகா் பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட் விநியோகம் செய்ய 143 பிரத்யேக வாகனங்களுக்கு ஆவின் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது.
ஆனால், ஒப்பந்தப்புள்ளியில் கூறப்பட்டிருந்த நிபந்தனைகளைப் பின்பற்றாத வாகனங்களையும் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அனுமதித்துள்ளனா். இதன்மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வதற்கு முன்பே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை முறையாக ஆய்வு செய்து, ஒப்பந்தப்புள்ளி விதிகளை பூா்த்தி செய்யாத வாகனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று உறுதி அளித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசுத் தரப்பு உத்தரவாதத்தைப் பின்பற்றி ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தாா்.