சென்னையில் உடலுறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் சந்த் மேத்தா. இவா், உடல்நிலை சரியில்லாமல் கடந்த அக். 11-ஆம் தேதி சென்னை குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். கெளதம் சந்த் மேத்தாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்திருந்தனா்.
இதையடுத்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படும் நபா்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற அரசின் உத்தரவுப்படி, கெளதம் சந்த் மேத்தாவின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்படி, அவரின் இல்லத்துக்குச் சென்ற மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலா் மற்றும் எழும்பூா் வட்டாட்சியா் ஆகியோா் அவரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.