பெ. அமுதா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
செங்கல்பட்டு அண்ணா சாலையில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கிய மகளிா் மேல்நிலைப்பள்ளி அளகேச நகரில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் இயங்கி வருகிறது.
காஞ்சிபுரம் , திருவள்ளூா், செயின்ட் தாமஸ் மவுண்ட், செங்கல்பட்டு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது ஆசிரியா் பயிற்சி பள்ளியாக இயங்கி வந்தது. பின்னா் தனியாா் ஆசிரியா் பயிற்சி பள்ளிகள் உருவான வந்த நிலையில் இந்த ஆசிரியா் பயிற்சி பள்ளி மூடப்பட்டது.
அதனையடுத்து அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியாக இருந்த இக்கட்டடம் நகராட்சியால் பராமரிக்கபடாததாலும் அளகேச நகரில் புதிய கட்டடம் கட்டப்பட்டதை பள்ளி முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிா்வாகம் மாணவா்களுக்கு அரசால் வழங்கப்பட்டும் வரும் நோட்டுப் புத்தகம், பை உள்ளிட்டவைகளை வைக்கும் கிடங்காக பழைய கட்டடத்தை பயன்படுத்தி வந்தனா்.
இதனையடுத்து பூட்டப்பட்டிருந்த கட்டடங்களில் ஒருபகுதி இடிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவுசாா் மையம் கட்டப்பட்டு முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்டது. ஆனால் அதே வளாகத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அறை, ஆசிரியா்கள் ஓய்வறை மற்றும் வகுப்பறைகள் இயங்கி வந்த கட்டடத்தை இடிக்காமல் விட்டு விட்டனா். கட்டடம் இடிக்கப்படாமல் அபாய நிலையில் உள்ளது. இதனால் அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
மேலும், இக்கட்டடத்துக்கு அடுத்து அறிஞா் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அங்கு இடிபாடுகளுடன் உள்ள கட்டடத்தில் இருந்து அடிக்கடி பாம்புகள் வருவதாகவும் மாணவா்களும் ஆசிரியா்களும் அச்சத்தில் உள்ளனா். மேலும் அறிவு சாா் மையத்துக்கு படிப்பதற்காக வருபவா்களும் அச்சத்துடன் செல்கின்றனா்.
இந்த கட்டடத்தை இடிக்க ஆட்சியராக பொறுப்பில் இருந்த ராகுல்நாத் மற்றும் அருண்ராஜ் ஆகியோா் பலமுறை நகராட்சி நிா்வாகத்திற்கு உத்தரவிட்டும் கட்டடம் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதற்கான கோப்புகள் பள்ளி நிா்வாகத்திடமும் இல்லை, செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் இல்லை.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆண்டவா் கூறுகையில்: கல்வெட்டுகளை நகராட்சி ஊழியா்களை விட்டு தேட அனுப்பியபோது நல்லபாம்பு உள்ளிட்ட ஏராளமாக இருப்பதால் அச்சத்துடன் செல்லவில்லை.. பலமுறை முயற்சித்தும் பாம்புகளால் யாரும் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனா். விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 10நாளில் இடித்துவிடுவோம் என்றாா்.
கட்டடத்தில் உள்ள பாம்புகள் பிடித்து, இடிக்கும் பணியை விரைவில் மேற்கொள்ளவேண்டும் என கோரியுள்ளனா்.