சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சார்பில் (சிபிசிஎல்) ரூ.432 கோடியில் மதிப்பீட்டிலான சென்னைத் துறைமுகம்-மணலி இடையே கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை மணலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கப்பல்களில் வந்திறங்கும் கச்சா எண்ணெய் சென்னைத் துறைமுகத்திலிருந்து காசிமேடு, தண்டையார்பேட்டை,கொருக்குப்பேட்டை வழியாக குழாய் மூலம் மணலியில் உள்ள இந்த ஆலையை வந்தடைகிறது.
இந்த குழாய்கள் 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. சுமார் 2.5 அடி விட்டம் கொண்ட இந்த இரும்புக் குழாய்கள் ஆயுட்காலம் முடிந்து சுமார் 18 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளன. இதனால் பல இடங்களில் குழாய்களில் சேதம் ஏற்பட்டு கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர் மாசடைந்தது.
புதிய குழாய்கள் பதிக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. சுற்றுச் சூழல் அனுமதி, கடலோர மக்களின் எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த இந்தத் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
ரூ.124 கோடியில் முதல் கட்டப்பணி: மொத்தம் சுமார் 17 கி.மீ. தூரம் கொண்ட இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 432 கோடி. இதில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம் முதல் மணலி வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்திற்கு ரூ. 124 கோடியில் முதல் கட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் நடைபெற்றது. பழைய குழாய்கள் 2.5 அடி விட்டம் இருந்த நிலையில் புதிய குழாய்கள் துருப்பிடிக்காத இரும்பினால் ஆன 3.5 அடி விட்டம் கொண்டவையாக அமைக்கப்பட உள்ளன.
சுமார் 12 மீட்டர் நீளம் கொண்ட குழாய்கள் வரிசையாக இணைக்கப்பட்டு பூமிக்குள் பதிக்கப்பட உள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவு சாலை வழியாக ஆலையைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழாய் பதிக்கும் பணிகள் சுமார் 12 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவடையும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 10.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை சிபிசிஎல் நிறுவனம் அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட குழாய்களின் ஆயுள்காலம் முடிந்துவிட்ட நிலையில் புதிய வழியில் குழாய்களைப் பதிக்கும் திட்டத்திற்கான கருத்துரு கடந்த 1998-ம் ஆண்டே தொடங்கி விட்ட நிலையில் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.