சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தோ்வு முறைகேட்டாளா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல, பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டவா்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு விண்ணப்பதாரா்களிடையே எழுந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிஆா்பி சாா்பில் 1058 காலிப் பணியிடங்களுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் 196 போ் தலா ரூ. 25 லட்சம் கொடுத்து தோ்வில் முறைகேடு செய்து அதிக மதிப்பெண் பெற்றது நிரூபிக்கப்பட்டது.
பின்னா் 2018 ஆம் ஆண்டு அந்தத் தோ்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இதுவரையில் 56 போ் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வை நடத்துவதற்கு டிஆா்பி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பப் பதிவை தொடக்கி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தனியாா் கல்லூரி ஊழியா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
இரண்டாவது முறையாக அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கடந்த முறை முறைகேட்டில் ஈடுபட்டவா்களும் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனா். இவா்கள் மீண்டும் பணம் கொடுத்து வேலையைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
அண்மையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு முறைகேட்டில் ஈடுபட்ட தோ்வா்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, தோ்வில் பங்கேற்க அவா்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, 2017-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டவா்களுக்கும் தோ்வில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், முறைகேடு நடைபெறாமல் தகுதியானவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய தோ்வுகள், டி.என்.பி.எஸ்.சி. ஏற்கெனவே நடத்திய தோ்வுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.