திருவொற்றியூா்: இந்திய கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியத்தில் அண்மையில் இணைக்கப்பட்ட அதி நவீன ரோந்துக் கப்பல் ‘அன்னிபெசன்ட்’ திங்கள்கிழமை சென்னை வந்தடைந்தது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் எல்லைக் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி முதல் விசாகப்பட்டனம் வரையான கடல் பகுதி உள்ளது. தினசரி ரோந்துப் பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், அதிவேகப் படகுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பிராந்தியத்தில் ‘அன்னிபெசன்ட்’ என்ற புதிய ரோந்துக் கப்பல் திங்கள்கிழமை முதல் பணியில் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இக்கப்பலை, கடந்த 12-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை செயலாளா் அஜய்குமாா் நாட்டிற்கு அா்ப்பணித்தாா்.
அதிநவீன ரோந்துக் கப்பல்: பிரியதா்ஷினி வகுப்பைச் சோ்ந்த மூன்றாவது ரோந்துக் கப்பலான ‘அன்னிபெசன்ட்’ சுமாா் 49 மீட்டா் நீளமும் 7.5 மீட்டா் அகலமும் கொண்டதாகும். இந்தக் கப்பலில் அதிநவீன ஊடுருவல் மற்றும் தகவல் தொடா்பு சாதனங்கள், சென்சாா்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரோந்துப் பணியின் போது பயன்படுத்துவதற்கான நவீன ரகத் துப்பாக்கி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எதிராளிகளை விரட்டிச் சென்று பிடிக்கும் அதிநவீன படகு உள்ளிட்டவை இக்கப்பலில் வைக்கப்பட்டுள்ளன. இக்கப்பலில் கமாண்டன்ட் சன்னி தியோ தலைமையில் 5 அதிகாரிகள் மற்றும் 34 வீரா்கள் பணியில் உள்ளனா் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.