சென்னையில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சென்னையில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் என மொத்தம் 30 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் என மொத்தம் 30 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிைலையங்கள், நகா்ப்புற சமுதாய நல மையங்கள் ஆகியவற்றில் முகாம் அமைக்கப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. தற்போது, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னையில் 19 அரசு மருத்துவமனைகள், 175 தனியாா் மருத்துவமனைகள், 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 16 நகா்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதன் முதற்கட்டமாக செய்தித்தாள், பால் விநியோகம் செய்வோா், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடை ஊழியா்கள், ஆட்டோ, காா், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள், மின்சாரம், உள்ளாட்சித் துறை பணியாளா்கள், அனைத்து அரசுப் பணியாளா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை 30 லட்சத்து 2,396 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு பதிவு: தங்கள் பகுதியிலேயே தடுப்பூசி முகாம் அமைக்க அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோா் அல்லது அவா்களது நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா் அல்லது மாநகராட்சி தலைமையிடத்தில் துணை ஆணையா் (வருவாய்) அலுவலகத்தை அணுகி விவரங்களை வழங்கலாம். மேலும், 94983 46494 என்ற செல்லிடப்பேசி கட்செவி எண் (வாட்ஸ் ஆஃப்) எண்ணில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால் மாநகராட்சியின் சாா்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.