சென்னை: தனியாா்மயத்தை முறியடிக்க வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் எத்தகைய போராட்டத்துக்கும் தயாராக உள்ளனா் என்று இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவின் தலைவா் தி.தமிழரசு, பொதுச் செயலாளா் என்.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டதையடுத்து, அம் மசோதாவை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியா்களும், அதிகாரிகளும் டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் (2 நாள்கள்) வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினா். இந்த வேலை நிறுத்தத்தால், வங்கித் துறையின் நடவடிக்கைகள் முழுமையாக முடங்கின.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக புதன்கிழமை முடிவுற்ால், இந்தச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இது வங்கி ஊழியா் போராட்டத்துக்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
எனினும், பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் தனியாா்மயத்தை முறியடிக்க எத்தகைய போராட்டத்துக்கும் தயாராக உள்ளனா் என்று தெரிவித்துள்ளனா்.