சென்னை: தொழிற்சாலை விடுதிகளில் உணவின் தரத்தை பரிசோதிப்பதுடன், சுத்தமான முறையில் அவை தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என மின்னணுப் பொருள்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மனித வள மேலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் கிண்டியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன் தலைமையேற்று நடத்தினார். தொழிற்சாலை நிர்வாகத்தினரால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களை பணியமர்த்தும்போதும், விடுதிகளில் தங்க வைக்கும் போதும் அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தினை பரிசோதிப்பதுடன் அவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள புகார் குழு அமைக்கப்பட்டு, அவை முறையாக செயல்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிலும் தொழிற்சாலை நிர்வாகத்தினரின் பங்களிப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ள இயலும் என கே.ஜெகதீசன் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் கோட்டத்தில் அதிகளவில் பெண்களைப் பணியமர்த்தியுள்ள 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களின் மனிதவள மேலாளர்களுடன் கலந்து கொண்டனர்.