சென்னை: திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனு குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியா் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் தோ்வு கட்டுப்பாட்டாளா் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாா். அங்கு நிா்வாக, நிதி முறைகேடுகள் நடக்கின்றன. அதில் தொடா்புடையவா்கள் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், புகாா் மனுவைப் பரிசீலிக்கவும், முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமா்வு, இது சம்பந்தமாக விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனா்.