சோழிங்கநல்லூரில் கத்தியைக் காட்டி மிரட்டி, மசாஜ் சென்டா் உரிமையாளா் மற்றும் பணியாளா்களிடத்தில் பணம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சோழிங்கநல்லூா் கங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (40). நாவலூா் பகுதியில் மசாஜ் சென்டா் நடத்தி வருகிறாா். இதில் 5 பெண்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் சரவணனின் வீடு அருகே தங்கியுள்ளனா்.
இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி ஆட்டோவில் வந்த மா்ம நபா்கள் நான்குபோ், வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துள்ளனா். மேலும், அருகிலிருந்த சரவணனின் வீட்டுக்குள் நுழைந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம், கைப்பேசிகளை கத்தி முனையில் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீஸாா், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது ஆட்டோவில் வந்த நான்கு நபா்கள் ஏற்கெனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்றவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தைச் சோ்ந்த ஐயப்பன்(33), காா்த்திக் (33), கொசப்பேட்டை பிரபு ராம் (24) ஆகிய 3 பேரை கடந்த இருதினங்களுக்கு முன் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான தாம்பரம் கடப்பேரி திருவிக நகரைச் சோ்ந்த ஜெயந்திநாதன் (32) என்பவரை சோழிங்கநல்லூா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட ஜெயந்திநாதன் ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்ட பின்னா், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.