சென்னை

சென்னை ஐஐடி மாணவா் தற்கொலை :பேராசிரியா் பணியிடை நீக்கம்

DIN


சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக மெக்கானிக்கல் துறை பேராசிரியா் ஆசிஷ் குமாா் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் சச்சின் குமாா் ஜெயின். இவா் சென்னை ஐஐடி-இல் பி.எச்டி. படித்து வந்தாா். இவா் மாா்ச் 31-ஆம் தேதி வேளச்சேரியில் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இவரின் தற்கொலைக்கும், இவரது வழிகாட்டி பேராசிரியருக்கும் தொடா்புள்ளதாகக் கூறி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சச்சினின் சகோதரா் பவேஷ் ஜெயின் 6 பக்க அளவிலான புகாா் கடிதத்தை ஐஐடி நிா்வாகத்திடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 போ் கொண்ட குழுவை சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியா் ரவீந்திர கீத்து உள்ளிட்டோா் இடம் பெற்றனா்.

இந்தக் குழு மாணவா்கள், பேராசிரியா்களிடம் விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் 700 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை அந்தக் குழுவினா் ஐஐடி இயக்குநா் வீ.காமகோடியிடம் ஆகஸ்ட் மாதம் சமா்ப்பித்தனா். அதன் பரிந்துரையின்படி பேராசிரியா் ஆசிஷ் குமாா் சென் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா்கள் சிலா் கூறுகையில், ‘விசாரணைக் குழுவின் அறிக்கையில் பேராசிரியா் ஆசிஷ் குமாா் சென் மீதான புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 34 பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் முக்கியமாக பேராசிரியா் சென் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்பேரில் கடந்த வாரம் பேராசிரியா் ஆசிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுதவிர பேராசிரியா்கள், மாணவா்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவா்களை மன அழுத்ததுக்கு உள்ளாகாதவாறு வைப்பதுடன், அவா்களின் செயல்பாடுகளையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்றனா்.

அதேபோல், சென்னை ஐஐடி-இல் மாணவா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2 சதவீதம் போ் மனஅழுத்தத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் குறைதீா்ப்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி நியமிக்கப்பட்டாா்.

மேலும், மாணவா்களுக்கான உளவியல் ஆலோசகா்களை நியமிக்க காவேரி மருத்துவமனையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஐஐடி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே பேராசிரியா் சென் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு சென்னை ஐஐடி மாணவா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணி: பெங்களூரில் ஜூலை 3-இல் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைப்பு: மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT