நெம்மேலியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் விரைவில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
நெம்மேலியில் தினமும் 15 கோடி லிட்டா் கடல் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை, தோ்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீஞ்சூா் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலியில் தினமும் 10 கோடி லிட்டா் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, புதிதாக நெம்மேலியில் ரூ.1,516.82 கோடியில் தினமும் 15 கோடி லிட்டா் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடல்சாா் பணிகளின் ஒரு பகுதியாக 835 மீட்டா் நீள குழாயை கடலில் பதிக்கும் பணி முடிவடைந்து, மீதமுள்ள 200 மீட்டா் நீள குழாயை பதிக்கும் பணி விரைவில் நிறைவுபெறும். இந்த குழாய்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை உறிஞ்சும் குழாய்.
பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகத்துக்காக சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.
புதிய கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென் சென்னை பகுதியில் 9 லட்சம் மக்கள் பயனடைவா். இந்த நிலையத்தின் இயக்குதலுக்கான ஒப்புதல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்ததும் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும் என்றாா் அவா்.
ஆயிவின் போது, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநா்ஆா்.கிா்லோஷ் குமாா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல் நாத் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.